அரசியல்தமிழ்நாடு

அறிவித்ததோடு நின்றுவிட்ட ஜெ.ஜெ. பல்கலைக்கழகம் : உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்

கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் விழுப்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த சூழலில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டு அதன் ஒருபகுதி ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகமாக செயல்படும் என்று சட்டமன்றத்தில் கடந்த அதிமுக அரசு மசோதா நிறைவேற்றியது. இதையடுத்து தேர்தல் நேரம் வந்ததால் அவசர அவசரமாக விழுப்புரம் திரு.வி.க தெருவில் உள்ள பழைய கட்டடத்தில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது.

இதற்கு பெரியார் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறை பேராசிரியராக பணியாற்றி வந்த எஸ்.அன்பழகன் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பின் ஜெயலலிதா பல்கலைக்கழகம் முடக்கப்படுவதற்கான வேலைகள் நடப்பதாக அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டினர். இதனை உறுதிப்படுத்தும் வகையில் துணைவேந்தரை தவிர மற்ற அனைத்து பொறுப்புகளும் காலியாகவே இருக்கின்றன. இந்த சூழலில் ஜெ ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூட முயற்சிக்கும் தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்தார்.

வரும் 26ஆம் தேதி அதிமுக சார்பில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விழுப்புரத்தில் பெயருக்காக பல்கலைக்கழகம் ஆரம்பித்தார்கள். ஆரம்பிக்கக் கூட இல்லை. அறிவித்ததோடு நின்றுவிட்டது. தேவையில்லாமல் பெயர் வைத்ததற்காக ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்க முடியுமா? அதனால் ஜெ.ஜே என்று பெயர் வைக்கப்பட்ட பல்கலைக்கழகம் தேவையற்ற ஒன்று எனக் குறிப்பிட்டார்.

ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்படும் நடவடிக்கைக்கு அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான ’நமது அம்மா’வில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், அரசியல் விபத்தால் ஆட்சிக்கு வந்திருக்கும் திமுக, ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூட முடிவெடுத்திருப்பது அருவருப்பான அரசியல் காழ்ப்புணர்ச்சி. சென்னையிலே 2,500 கோடி ரூபாயில் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்குவோம் என்று கூறியுள்ளார்கள்.

அதற்கு பணம் இருக்கும் போது கல்விக் கூடத்திற்கு கையிருப்பு பணம் இல்லை என்று மூடுவது பித்தலாட்டத்தின் உச்சமாகும். ஜெ.ஜெ பல்கலைக்கழகத்தை மூடும் செயலை திமுக அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் அதற்கான எதிர் விளைவுகள் திமுகவிற்கும், அக்கட்சியின் பெருமைக்கு இலக்கணமாக அடையாளப்படுத்தப்படும் தலைவர்களின் புகழுக்கும் சிறுமை சேர்ப்பதாக அக்கட்சியின் செயல் அமைந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button