அரசியல்

எம்.ஜி.ஆருடன் சசிகலா பேசியது உண்மையா?

அதிமுகவில் இருந்து தற்போது ஓரங்கட்டப்பட்டுள்ள சசிகலா, தொண்டர்களுடன் பேசும் ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியான ஆடியோ ஒன்றில், தான் ஜெயலலிதாவுடன் மட்டும் இருந்ததில்லை. எம்ஜிஆருடனும் நேரடியாக பழகியுள்ளேன். அவர் சில விஷயங்களை தன்னிடம் கேட்பார் என்று சசிகலா பேசியிருந்தார். இதையடுத்து, அரசியல் களத்தில் சசிகலாவின் இந்த பேச்சு பேசுபொருளாகியது. எம்ஜிஆருக்கே சசிகலா ஆலோசனை வழங்கியதாக இந்த விஷயம் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து சசிகலா மீது அதிமுகவின் மூத்த தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். கேலிக்குறிய வகையிலும் சில கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா, இதுபற்றி சில கருத்துகளை தனியார் யூடியூப் சேனலிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அந்த சமயத்தில் மிகவும் துடிப்பான இளம் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சந்திரலேகா, எம்ஜிஆருக்கு பிடித்த பெண்ணாகவும் இருந்தவர். ஜெயலலிதாவுடன் சந்திரலேகா நட்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்பியவர். பல முறை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்கு மதிய உணவுக்கோ அல்லது இரவு உணவுக்கோ, சென்னைக்கு அலுவல ரீதியாக வரும் சந்திரலேகாவை அழைக்கும் வழக்கத்தையும் எம்ஜிஆர் வைத்திருந்தார்.

சந்திரலேகாவிடம் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய சசிகலாவின் கணவர் நடராசன் மூலமாகத்தான் சசிகலா ஜெயலலிதாவுக்கு அறிமுகமாகி நெருக்கமானவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு சந்திரலேகா அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதா மீது எம்ஜிஆருக்கு ஒரு சந்தேகம் இருந்ததாகவும், அவரிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று எம்ஜிஆர் தன்னிடம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார். அதே எம்ஜிஆர் தான் ஜெயலலிதாவுடன் தான் நட்பாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர் என்றும் சந்திரலேகா தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சசிகலா மிகவும் நெருக்கம் என்று தெரிவித்துள்ள சந்திரலேகா, ஒரு நாளைக்கு 10, 15 தடவை கார் அனுப்பி சசிகலாவை வர சொல்லுவார் ஜெயலலிதா. அந்த சமயத்தில் எம்ஜிஆர் மீது ஜெயலலிதா அப்செட்டாக இருந்தார் என்றும் தெரிவித்துள்ளார். எம்ஜிஆர் சசிகலாவை பல முறை ராமாபுரம் தோட்டத்துக்கு அழைத்துள்ளார். அதன்பேரில் சசிகலாவும் பலமுறை அங்கு சென்றுள்ளார். அது எல்லாமே ஜெயலலிதாவை பற்றி ஆலோசிக்க மட்டுமே என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எம்ஜிஆர் கூப்பிட்டு ஒவ்வொரு முறை சசிகலா ராமாபுரம் தோட்டத்துக்கு சென்றாலும், அப்போதெல்லாம் ஜெயலலிதா பற்றியே பேசப்படும். அரசியல் ரீதியாகவோ, கட்சி ரீதியாகவோ எதுவும் பேசியிருக்க மாட்டார் என்று தான் நினைக்கிறேன் என்றும் சந்திரலேகா தெரிவித்துள்ளார். ஜெயலலிதா யாரிடமும் பேச மாட்டார். ஆனால், பல தரப்பட்ட மக்களிடம் அவர் பேசி பழகும் பண்பு உடையவர் எம்ஜிஆர். அதுபோன்று சசிகலாவிடமும் அவருக்கு நேரடி தொடர்பு இருந்தது என்றும் சந்திரலேகா தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக சென்று வந்ததும் ஜெயலலிதாவிடம் பேசுவதை எம்ஜிஆர் நிறுத்தி விட்டார். போயஸ் கார்டனுக்கும் போகவில்லை. ஜெயலலிதா மீது எம்ஜிஆர் மிகவும் அப்செட்டாக இருந்தார் என்று சுட்டிக்காட்டிய சந்திரலேகா, அந்த சமயத்தில் எல்லாம் ஜெயலலிதாவை பற்றி சசிகலாவை கூப்பிட்டு எம்ஜிஆர் பேசுவார். அவர்கள் இருவருக்கும் இடையேயான கோபத்தை தணிக்க சசிகலா ஒரு பாலமாக இருந்துள்ளார். எம்ஜிஆர்-ஜெயலலிதா இடையேயான தவறான புரிதலை தவிர்க்க இருதரப்பிலும் அவர் பேசியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம், ஜெயலலிதாவை உளவு பார்க்க சசிகலாவை எம்ஜிஆர் வைத்திருக்க தேவையில்லை. முதல்வராக இருந்த அவரிடம்தான் காவல்துறையே இருந்தது. எனவே அது அவருக்கு தேவைப்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

சசிகலா அனைவரிடத்திலும் மிகவும் பாசமாக பழகக்கூடியவர். அக்கறை எடுத்துக் கொள்ளக் கூடியவர் என்று குறிப்பிடும் சந்திரலேகா, தற்போது அவரை வேலைக்காரி என்று கூறும் சிவி சண்முகம் உள்பட ஏன் ஓபிஎஸ்- ஈபிஎஸ் என யாரையுமே எம்ஜிஆருக்கு தெரியாது. இவர்களுக்கு வேண்டுமானால் எம்ஜிஆரை தெரியலாம். ஆனால் அவருக்கு இவர்கள் யாரையுமே தெரியாது. ஆனால், சசிகலாவை தெரியும். அவருடன் நேரடித் தொடர்பில் இருந்தவர் எம்ஜிஆர் என்றும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button