தமிழ்நாடு

கல்குவாரிகள் மறுசீரமைப்பு… ஸ்டாலின் அறிவுறுத்தல்..!

புவியியல் மற்றும் சுரங்கத்துறை, தமிழ்நாடு கனிம நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் பாதிக்காமல் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது குறித்து நிலையான சுரங்கக் கொள்கையை (Sustainable Mining Policy) உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்வர் ஸ்டாலின், செயற்கை மணல் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஒழங்குமுறைப்படுத்த புதிய கொள்கை உருவாக்குவது குறித்தும், கனிம வருவாயை அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

பயன்பாட்டில் இல்லாத குவாரிகளைக் கண்டறிந்து, வாய்ப்புள்ள இடங்களில் அக்குவாரிகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், பொதுமக்கள் மற்றும் கால்நடைகளுக்குப் பாதிப்பு விளைவிப்பதாக உள்ள பயனற்ற கல்குவாரிகளை மறுசீரமைப்பு செய்து, பாதுகாப்பினை உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்போது முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

மேலும், புவியியல் மற்றும் சுரங்கத்துறையில், குத்தகை விண்ணப்பம் பெறுவதில் தொடங்கி, குவாரி குத்தகை உரிமம் மற்றும் நடைச்சீட்டு வழங்கும் வரை சுரங்க நிர்வாகத்தில் மின்னணு சேவை முறையை ஏற்படுத்த விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

தமிழ்நாடு கனிம நிறுவனம், அடுத்த ஐந்தாண்டுகளில் ரூ.250 கோடி அளவிற்கு வருவாயினை உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டுமெனவும், சிவகங்கை மாவட்டத்தில் கிடைக்கும் கிராபைட்டில் இருந்து அதிக செறிவூட்டப்பட்ட உயர்தர கிராபைட் தயாரிப்பதற்கு உரிய தொழில்நுட்ப முறை குறித்து ஆய்வு மேற்கொள்ளவும், அரக்கோணம் அருகில் செயற்கை மணலைத் தயாரிக்க புதிய உற்பத்திப் பிரிவு தொடங்கவும் செயல் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு மேக்னசைட் நிறுவனம் கூடுதல் சுரங்கப் பகுதிகளை அடுத்த மூன்று வருடத்தில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரவும், உலகத்தரம் வாய்ந்த ஆலோசகரை நியமித்து உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், திருவக்கரை கிராமத்தில் 2 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்மரப் படிமங்கள் மற்றும் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லுயிர்ப் படிமங்கள் ஆகியவற்றைப் பாதுகாத்து யுனெஸ்கோவின் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button