காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்ய மாட்டேன், நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட மதுரை திலகர் திடல் பெண் காவல் ஆய்வாளர் விமலா!

தமிழகத்தில் 1992 ஆம் ஆண்டு முதன் முதலாக அனைத்து பெண்களுக்காக சென்னையில் ஆயிரம் விளக்கு பகுதியில் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போது பல விமர்சனங்கள் வந்த நிலையில் அந்தக் காவல் நிலையம் வெற்றிகரமாக செயல்பட்டதால் அதையடுத்து தமிழகம் முழுவதும் படிப்படியாக அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 222 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் இயங்கி வருகிறது. இந்த காவல் நிலையங்களில் மொத்தம் 35,359 பெண் காவலர்கள் பணியில் இருக்கிறார்கள். தற்போது அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பொன்விழா காண உள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிலையங்களாக மாறிவிட்டது.நீதிபதிகள்
தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வரும் பெண்கள் குழந்தைகள் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாகவும் தைரியமாகவும் தெரிவிக்க அனுமதி கொடுப்பதில்லை என்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் பெண்களுக்கான போதுமான வசதிகள் இல்லை எனவும் அது மட்டுமில்லாமல் மகளிர் காவல் நிலையங்களுக்கு வரும் புகார்கள் மீது விசாரணை மேற்கொள்ளும் போது அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் அதற்கும் குறைவாக தண்டனை வழங்கும் குற்றங்களில் எந்திரம் போல் கையாண்டு கைது செய்து வருவதாகவும் இதுபோன்று கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் அதை அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பின்பற்ற தவற விட்டதாகவும் வழக்கு விசாரணையின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை அர்நேஷ்குமார் வழக்கிலும், லலித குமாரி வழக்கிலும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. இது சம்பந்தமாக தமிழக டிஜிபிக்கு அனுப்பிய சுற்றறிக்கைக்கு நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக டிஜிபி நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பெண்களைப் பாதுகாத்து பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது தக்க தண்டனையை பெற்று தரும் அமைப்பாக மகளிர் காவல் நிலையங்கள் இருக்கும் என நீதிமன்றங்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது விசாரணை என்ற பெயரில் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிலையங்களாக மாறி இருப்பது வேதனை அளிக்கிறது என்று நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் பொன்விழா எடுக்கும் இந்த தருணத்தில் இதுபோன்று கட்டப்பஞ்சாயத்து நடக்கும் நிலையங்களாக மாறிவிட்டதாக வரும் குற்றச்சாட்டுகளுக்கு நீதிமன்றம் வழங்கும் உத்தரவை நிறைவேற்ற தமிழக உள்துறை அமைச்சர் மற்றும் தமிழக டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றம் இதுபோன்று கடுமையாக எச்சரித்ததற்கு மதுரை திலகர் திடல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விமலா நடந்து கொண்ட முறையற்ற செயலால்தான் என்கின்றனர் நீதிபதிகள்.
சில வருடங்களுக்கு முன்பு மதுரையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவரது மனைவி மதுரை திலகர் திடல் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்திருந்தார்.
மனைவி புகாரின் பெயரில் கணவர் ஜனார்த்தனன் விசாரணைக்கு காவல் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். விசாரணைக்கும் ஜனார்த்தனன் சென்றுள்ளார். விசாரணை என்ற பெயரில் திலகர் திடல் காவல் ஆய்வாளர் விமலா முறையான விசாரணை மேற்கொள்ளாமல் கட்டப்பஞ்சாயத்து செய்து ஜனார்த்தனன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறைக்கு அனுப்பி உள்ளார். இதை எதிர்த்து ஜனார்த்தனன் மதுரை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களும் கட்டப்பஞ்சாயத்து செய்யும் நிலையமாக மாறிவிட்டதாக கடுமையாக எச்சரித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் மகளிர் காவல் நிலையங்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டும் அந்த உத்தரவுகளை பின்பற்றாமல் நடந்து வருவதாகவும் இது சம்பந்தமாக டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டி இருந்தனர். அதன் பின்பு
மதுரை திலகர் திடல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விமலா எந்திரம் போல் செயல்பட்டுள்ளார் என்றும் அவருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது. அந்த நோட்டீசை பெற்றுக்கொண்ட திலகர் திடல் காவல் ஆய்வாளர் விமலா நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொண்டதுடன் இனிமேல் இதுபோன்ற தவறு செய்ய மாட்டேன் என்றும் உறுதிமொழி கொடுத்ததன் பெயரில் நீதிபதிகள் காவல் ஆய்வாளரை எச்சரித்ததை தொடர்ந்து இனிமேலாவது தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் நேர்மையான முறையில் நடுநிலையாக விசாரணை மேற்கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.