கேள்விக்குறியாகும் கொடைக்கானல் மலை..?

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் அரசு அனுமதி இல்லாமல் திறந்தவெளியில் கூடாரம் அமைத்து சுற்றுலாப் பயணிகளை தங்கவைப்பது ஆபத்தான போக்காக உள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதால், கூடாரம் அமைத்து தங்குவதை தடை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு முறையாக தடை விதிக்கப்படவில்லை. ஆனால், அங்குள்ள சுற்றுலாத் தலங்கள் எதுவும் இதுவரை திறக்கப்படவில்லை. இருந்தபோதும், கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.
பிரையண்ட் பூங்கா, தூண்பாறை, குணா குகை, பைன்பாரஸ்ட், ஏரியில் படகு சவாரி என சுற்றுலாத் தலங்களுக்கு தடையால் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் பொழுதை கழிக்க மலை கிராமப்பகுதிக்கு செல்கின்றனர்.
விடுதிகளும் முழுமையாக திறக்கப்படாத நிலையில், மலை கிராமங்களில் வனத்தை ஒட்டிய பகுதியில் கூடாரம் அமைத்து தங்குகின்றனர். இதற்காக சிலர் விதிகளை மீறி ஆபத்தான முறையில் சுற்றுலாப் பயணிகள் தங்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
கொடைக்கானல் மேல்மலைப்பகுதியில் பூம்பாறை, குண்டுபட்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட மலை கிராமங்களில் காலியிடங்களில் கூடாரம் அமைத்து தங்க சிலர் விதிகளை மீறி ஏற்பாடு செய்கின்றனர்.
கொடைக்கானல் மேல்மலைப்பகுதி ஆனைமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பகுதியாக உள்ளது. மேலும், கொடைக்கானல் மலைப்பகுதிகளில் யானைகள் நடமாட்டமும் அதிகம் உள்ளது.
கூடாரங்களில் தங்குபவர்கள் ‘கேம் பயர்’ எனும் பொதுவெளியில் தீயை மூட்டி ஆடல், பாடல்கள் மூலமும் தங்கள் இரவுப் பொழுதை கழிக்கின்றனர். இதுபோன்று விதிகளை மீறி வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் கூடாரம் அமைப்பது கொடைக்கானலில் அதிகரித்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கூடாரம் அமைத்து தங்கி சுற்றுலாப் பயணிகள் மீது யானை தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுபோன்ற நிகழ்வுகள் கொடைக்கானலில் நடைபெறாமல் தவிர்க்க விதிமுறைகளை மீறி கூடாரம் அமைப்பவர்கள் மீது வனத்துறையினர், போலீஸார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில், “கூடாரம் அமைத்து தங்குபவர்கள் விட்டுச்செல்லும் பிளாஸ்டிக் குப்பைகள் வனவிலங்குகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. கேம் பயர் நிகழ்ச்சியால் வனப்பகுதியில் தீ பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் மட்டுமே வன விலங்குகள் இரை தேடி வெளி வரும் சூழ்நிலையில், டென்ட் கூடாரத்தில் தங்கும் பயணிகளுக்கு பாதுகாப்பு இல்லை. வனவிலங்குகளின் வழித்தடத்தை மறைப்பதாலும், மனிதவிலங்கு மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு அனுமதி இல்லாமல் மலை உச்சியின் மீது கூடாரங்கள் அமைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
மேலும், கொடைக்கானல் மலை சாலைகளில் வன விலங்குகளின் நடமாட்டம் இரவில் அதிகமாகக் காணப்படுவதால், இரவில் வாகனங்களில் பயணிக்கும் பயணிகள் மிதவேகத்தில் பயணிக்க வேண்டும் என, வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.