திமுகவில் இணைய இருந்த முன்னாள் அதிமுக எம்.பி. நீக்கம்! EPS & OPS அறிவிப்பு
திமுக பத்தாண்டுகளுக்குப் பின் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. முதன்முறையாக முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலின் கடந்த 75 நாள்கள் ஆட்சி பலதரப்பினரிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்த பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் அதிமுக முன்னாள் எம்.பி, பரசுராமன் வெளியிட்டுள்ள வீடியோவில், “அறிஞர் அண்ணா வழிகாட்டுதல் படி, அவரின் கொள்கைகளை பின்பற்றி மிக சிறப்பாக ஆட்சி செய்யும் முதல்வர் ஸ்டாலினை வாழ்த்த நான் கடமைப்பட்டுள்ளேன். தமிழக மக்கள் யாரை நம்பி ஆட்சியை கொடுத்தார்களோ, அவர் சிறப்பான ஆட்சியைத் தருகிறார். ஸ்டாலின் மிகச்சிறப்பாக ஆட்சி செய்வதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலராக இருக்கும் பரசுராமன் இவ்வாறு பேசியிருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அதிமுக, அமமுக, மநீம, பாமக என பல கட்சிகளிலிருந்தும் திமுகவை நோக்கி பலரும் படையெடுத்து வரும் நிலையில் பரசுராமன் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூர் முன்னாள் எம்.பியான பரசுராமன், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்துக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஆனால் சமீபகாலமாக இருவருக்குமான நெருக்கம் குறைந்ததாக கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பரசுராமன் வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை. இந்நிலையில் பரசுராமன் திமுகவுக்கு செல்ல நாள் பார்த்து வருகிறாரோ என்ற பேச்சு அதிமுகவுக்குள் எழுந்துள்ளது. இதையடுத்து கொங்குமண்டல முன்னாள் எம்.பி சத்யபாமா திமுகவில் விரைவில் இணையவுள்ளார்.