தமிழ்நாடு

கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டிய அதிமுக மாஜி அமைச்சர் உறவினர்களின் மூன்று வணிக வளாக கட்டிடங்கள் இடிப்பு

சிவகங்கையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் உறவினர்கள், கோயில் நிலத்தை அபகரித்து கட்டிய 3 வணிக வளாக கட்டிடங்கள் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இடிக்கப்பட்டன. சிவகங்கை நகரில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி பிள்ளையார் கோயிலுக்கு சொந்தமாக 142 ஏக்கர் 8 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்தில் சர்வே எண் 335, 330ல் உள்ள சுமார் 9 ஏக்கர் 58 சென்ட் நிலத்தை முன்னாள் அதிமுக அமைச்சராக இருந்த பாஸ்கரனின் உறவினர்கள் போலியாக பத்திரம் தயார் செய்து ஆக்கிரமித்து அதில் கம்பி வேலி அமைத்தனர். தொடர்ந்து இடத்தின் ஒரு பகுதியில் வணிக வளாகம் கட்டினர். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்க வேண்டும் என வலியுறுத்தி சிவகங்கை திமுக நகர் செயலாளர் துரைஆனந்த், தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு புகார் மனு அனுப்பினார்.

இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் ஆகியோர் கடந்த ஜூன் 20ம் தேதி ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்தனர். இந்நிலையில் சிவகங்கை திமுக மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன் ஐகோர்ட் மதுரை கிளையில், சிவகங்கை கவுரி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான இடத்தை முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர்கள், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆக்கிரமித்தும், அதில் வணிக வளாகம் கட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். எனவே கட்டிடத்தை அகற்றவும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டுமென பொது நல வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் ஜூன் 28ம் தேதி, அறநிலையத்துறையின் நோட்டீஸ்படி ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிடத்தை அகற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அறநிலையத்துறை சார்பில் கட்டிடத்தை அகற்றிவிட்டு, அதற்கான செலவை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து வசூல் செய்ய வேண்டும். இந்த நடவடிக்கைகளை 12 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையடுத்து  சிவகங்கை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செல்வி தலைமையில் வணிக வளாக கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கியது. மொத்தமுள்ள 3 கட்டிடங்களில் ஒரு கட்டிடம் மூன்று தளங்கள் கொண்டது. ஜேசிபி இயந்திரம் மூலம் 3 கட்டிடங்களும் சுமார் 2 மணி நேரத்தில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ரூ.10 கோடி மதிப்புள்ள கவுரி விநாயகர் கோயில் இடம் மீட்கப்பட்டதால் பக்தர்கள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button