அரசியல்

சிக்கலில் ஓ.பி.எஸ்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது. அதிமுக பிரதான எதிர்கட்சியாக உள்ளது. 65 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதில் பெரும்பாலான இடங்கள் கொங்கு மண்டலத்தில்தான் கிடைத்தன.

சசிகலா, தினகரனை கட்சியிலிருந்து வெளியேற்றியது, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு கொடுத்தது ஆகியவை தென் மண்டலத்தில் அதிமுகவுக்கு எதிரான சூழலை உருவாக்கியதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் 3 தொகுதிகளை திமுக கைப்பற்றிய நிலையில் போடி தொகுதி மட்டுமே அதிமுக வசமானது.

ஒபிஎஸ் அந்த தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றம் சென்றுள்ளார். அந்த வெற்றியும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. அவருக்கு எதிராக தங்கதமிழ்ச்செல்வனை திமுக நிறுத்தியது.

அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்த தங்கத் தமிழ்ச்செல்வன் ஓபிஎஸ் வாக்கு வங்கியை சிதறடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

வாக்கு எண்ணிக்கையின் போது மிகுந்த பரபரப்பைக் கிளப்பிய தொகுதிகளில் ஒன்று போடி தொகுதி. இறுதியாக தோல்வி பயத்தை முழுதாக உணர்ந்துவிட்டு தமிழ்ச்செல்வனை விட 11,055 வாக்குகள் அதிகமாகப் பெற்று ஓபிஎஸ் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் ஓபிஎஸ் வெற்றிக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

போடி தொகுதியைச் சேர்ந்த மிலானி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ஓ.பன்னீர்செல்வம் தனது வேட்புமனுவில் விவரங்களை மறைத்ததாகவும், அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்தாலும் அதிமுகவில் தனது இடத்தை தக்கவைக்க ஓபிஎஸ் போராடி வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவரது வெற்றிக்கு எதிராக இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button