திருமண செலவிற்கு பணம் இல்லாததால் காவல் உதவி ஆய்வாளர் உடை அணிந்து வசூல் செய்த நபர்!
பெருந்துறை ஊத்துக்குளி ரோடு, மேம்பாலத்துக்கு கீழே, போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்துக்கொண்டு அந்த வழியில் வரும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி அவர்களிடம் பணம் கேட்டுள்ளார்.
இது சம்பந்தமாக அந்த வழியில் சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே ஊத்துக்குளி மேம்பாலத்திற்கு வந்த காவல்துறையினர் காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் நின்றிருந்த வாலிபரை விசாரணை நடத்தியபோது அதிர்ச்சி தரும் தகவலை தெரிவித்தார்.
அந்த நபர் விஜய மங்கலம் அருகே உள்ள மேட்டுப் புதூரைச் சேர்ந்த லட்சுமணன் என்பவருடைய மகன் தேவராஜ் (29) என்பதும், இவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு விசைத்தறி தொழிலாளியாக வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது.
இவருக்கு சில நாட்களுக்கு முன்பு வீட்டில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர்.
திருமண செலவிற்கு போதுமான பணம் இல்லாத அதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க காவல் உதவி ஆய்வாளர் போல் உடைய அணிந்து இருசக்கர வாகனங்கள் செல்பவர்களை வழிமறித்து மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து அவர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.