தேடப்பட்ட கொலை குற்றவாளி (முன்னாள் அமைச்சர் உதவியாளர் )காதலனுடன் கோவாவுக்கு தப்ப முயன்ற சைபர் கிரைம் பெண் காவல் ஆய்வாளர் கைது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமர் (வயது 60). அதே பகுதியை சோ்ந்தவர் ராமசாமி (65). இவருடைய மகன்கள் ராஜேந்திரன் (40), ராம்குமார் (35).
2 வாரத்துக்கு முன்பு அங்கு நடந்த கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ராமசாமி, அவரது மகன்கள் என 3 பேரும் சேர்ந்து ராமரை தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ராமர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை வழக்கில் ராமசாமி, ராஜேந்திரனை ஸ்ரீவில்லிபுத்தூா் நகர் போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ராம்குமாரை தேடி வந்தனர். பின்னா் பெங்களூருவில் பதுங்கி இருந்த அவரை போலீசார் பிடித்தனர். அப்போது அவருடன்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறுவாழ்வு முகாம் மற்றும் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலாவும் (42) உடன் இருந்தார். அவரையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் வருமாறு:-
விருதுநகரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் ராம்குமார் உதவியாளராக பணியாற்றி உள்ளார். அடிக்கடி செல்போனில் வித்தியாசமான டிக்-டாக், ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இந்த வீடியோக்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா தனது செல்போனில் பார்த்து வந்தார். அவரது வீடியோக்கள் சத்தியஷீலாவை வெகுவாக கவர்ந்தன. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே செல்போன் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஏற்கனவே திருமணம் ஆகாமல் இருந்து வந்தனர். இதனால் அவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதற்கிடையே 2 வாரத்துக்கு முன்பு நடந்த கோவில் திருவிழாவில் சத்தியஷீலாவும் பங்கேற்று இருந்தார். அங்கு நடந்த தகராறிலும் ராம்குமாருடன் அவர் இருந்துள்ளார்.
இதனால் ராமரின் கொலைக்கு உடந்தையாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியஷீலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதை அறிந்ததும் போலீசாரிடம் சிக்காமல் இருப்பதற்காக காதலனுடன் சத்தியஷீலா பெங்களூருவுக்கு தப்பிச் சென்றுள்ளார். அங்கு தங்களை பிடிக்க போலீசார் வந்ததை எப்படியோ அறிந்து கொண்ட இருவரும் கோவாவுக்கு செல்ல இருந்துள்ளனர். ஆனால் இருவரையும் போலீசார் மடக்கிப்பிடித்துவிட்டது தெரியவந்துள்ளது.
கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சத்தியஷீலா, ராம்குமார் தற்போது மதுரை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
வாலிபர் அனுப்பிய வீடியோக்களில் மனதை பறிகொடுத்து, பெண் இன்ஸ்பெக்டர் அவருடன் பழகி காதல் வய ப்பட்டதும், கொலை வழக்கில் சிக்கியதும் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.