பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை விற்கவில்லை… : மதுரை காப்பக நிர்வாகி வாக்குமூலம்
அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை விற்கவில்லை எனக் குழந்தைகளை விற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட காப்பக நிர்வாகி சிவக்குமார் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே ‘இதயம் டிரஸ்ட் ’ என்ற பெயரில் காப்பகம் நடத்தி வந்தவர் சிவக்குமார் (40). இவரது காப்பகத்தில் இருந்த ஐஸ்வர்யா என்ற பெண்ணின் ஒரு வயது ஆண் குழந்தை கரோனாவால் இறந்துவிட்டதாகக் கூறிய காப்பக நிர்வாகிகள், அக்குழந்தையை ரூ. 2 லட்சத்துக்கு இஸ்மாயில்புரத்தைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு விற்றது தெரிய வந்தது. மேலும் 2 வயது பெண் குழந்தையை மதுரை கல்மேடு பகுதியில் மற்றொரு தம்பதிக்கு விற்றுள்ளனர்.
இந்த 2 குழந்தைகளையும் தனிப்படையினர் மீட்டனர்.
இது தொடர்பாக ஏற்கெனவே 7 பேரை போலீஸார் கைது செய்தனர். காப்பக நிர்வாகி சிவக்குமாரை தேனி மாவட்டம், போடி அருகே போலீஸார் கைது செய்தனர்.போலீஸாரிடம் சிவக்குமார் அளித்த வாக்குமூலம் வருமாறு: சேவையை நோக்கமாகக் கொண்டே முதியோர் காப்பகம் நடத்தினேன். காப்பகத்தில் குழந்தைகள் கஷ்டப்படுவதைக் காட்டிலும், குழந்தையில்லாத தம்பதிகளிடம் கொடுத்தால் நன்றாக வளருமே என்ற நோக்கத்தில்தான் குழந்தைகளை வழங்கினோம். அதிக பணத்துக்கு ஆசைப்பட்டு குழந்தைகளை விற்கவில்லை.
ஒரு வயது ஆண் குழந்தை கரோனாவால் இறந்ததாக, நான் யாருக்கும் வாட்ஸ் ஆப்-ல் ஆவணம் எதையும் அனுப்ப வில்லை. குழந்தைகளை வழங்கிய விவகாரத்தில் பெரிய அளவில் பிரச்சினை ஏற்படாது எனக் கருதினேன். இருப்பினும், இந்த விவகாரத்தில் போலீஸார் தேடுவதை அறிந்து, மதர்ஷாவுடன் எங்காவது நீதிமன்றத்தில் சரண் அடையலாம் எனக் கருதினேன். ஆனாலும் தேனி அருகே போலீஸார் எங்களை பிடித்தனர். இவ்வாறு சிவக்குமார் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.