பதட்டத்தில் மாஜி அமைச்சர்கள்..! : லஞ்ச ஒழிப்புத்துறையின் ஆட்டம் ஆரம்பம்…
அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு, அலுவலகங்கள் என 20க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த குறி யார் என்ற விவாதம் அதிமுக மாஜி அமைச்சர்கள் மத்தியில் எழுந்துள்ளதாம்.
திமுக எதிர்கட்சியாக இருந்தபோதே அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் மனு கொடுத்தார் எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின். ஆனால் ஆளுநர் எந்த நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
திமுக தேர்தல் அறிக்கையில் இந்த ஊழல் புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என ஸ்டாலின் கூறியிருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கந்தசாமி ஐபிஎஸ் கொண்டு வரப்பட்டார். ஒரு காலத்தில் அமித் ஷாவையே உள்ளே தள்ளிய இவரை கொண்டுவந்தது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியது.
கொரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்ததால் அதிமுக அமைச்சர்கள் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது திமுக ஆட்சிக்கு வந்து இரு மாதங்கள் முழுதாக முடிவடைந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு விசாரணைகள் வேகமெடுக்கின்றன. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவர் மனைவி விஜயலட்சுமி மற்றும் அவர் தம்பி சேகர் ஆகியோர் பெயரில் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஜூலை 21ஆம் தேதி, கரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு, எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது 13(2)1 r/w 13(1)b, of the PC (Amendment) act 2018, மற்றும் 12 r/w, 13(2) r/w 13(1)b, of the PC (Amendment) act 2018-ன் படி வழக்கு பதிவு செய்தது.
ஜூலை 22ஆம் தேதி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவருடைய உறவினர்கள் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என சென்னையில் உள்ள வீடு உட்பட தமிழகம் முழுவதும் 26 இடங்களில் மாலை வரை சோதனை நடத்தப்பட்டது.
இதில், கணக்கில் வராத 25,56,000 ரூபாய் ரொக்கப்பணம் மற்றும் பல கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு அடுத்தபடியாக எந்த மாஜி அமைச்சர் சிக்கப் போகிறார் என்று விசாரிக்கையில் இரு மாஜிக்களை கைகாட்டுகின்றனர். எடப்பாடிக்கு நெருக்கமான இரு மணிகளுமே குறிவைக்கப்பட்டுள்ளனர். இருவர் சார்பில் மீடியேட்டர் மூலம் டீல் பேசப்பட்டு வருவதாக கூறுகிறார்கள். அதில் காஸ்ட்லியான மணிக்கு தற்போது குறிவைக்கப்பட்டுள்ளது என்றும், சுகாதாரமான மாஜியையும் லஞ்ச ஒழிப்புத்துறை நெருங்கி வருவதாகவும் கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.