மரணமடைந்த ராணுவ வீரர் மனைவிக்கு கருணை அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலர் பணி!
விருதுநகர் மாவட்டம்
தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் மூலம் 1336 பயனாளிகளுக்கு ரூ.23,62,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகைகளை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகர்ஆகியோர்கள் முன்னிலையில் நலத்திட்ட உதவிகளை
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வழங்கினார்.
தொழிலாளர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, கண்கண்ணாடிகளுக்கான உதவித்தொகை, மாதாந்திர ஓய்வூதியத் தொகை, இயற்கை மற்றும் விபத்து மரண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில், 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு 985 பயனாளிகளுக்கு ரூ.16,99,500/- மதிப்பிலான கல்வி உதவித்தொகைகளையும், 338 பயனாளிகளுக்கு ரூ.3,38,000/- மதிப்பிலான ஓய்வூதியம் உதவித்தொகைகளையும் மற்றும் 13 பயனாளிகளுக்கு ரூ.3,25,000/- மதிப்பிலான இயற்கை மரணம் உதவித்தொகைகளையும் ஆக மொத்தம் 1336 பயனாளிகளுக்கு ரூ.23,62,500/- மதிப்பிலான நலத்திட்ட உதவித்தொகைகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் வழங்கினார்.
இராணுவத்தில் பணியாற்றி மரணமடைந்த சிவகாசி, எம்.துரைச்சாமிபுரத்தை சேர்ந்த திரு.அசோக்குமார் அவர்களுடைய மனைவி திருமதி.ரூபாவதி அவர்களுக்கு கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்;.ராமச்சந்திரன் அவர்கள்; வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் பேசியபோது முன்னாள் முதலமைச்சர் டாக்டர்.கலைஞர் அவர்களால் உடலுழைப்பு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு, 17.03.1999 அன்று தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலவாரியம் உருவாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2006 முதல் 2011 வரை தனி நலவாரியங்கள் உருவாக்கப்பட்டன.
மேலும், அமைப்புச்சாரா தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு பதிவு மற்றும் புதுப்பித்தலின் போது வசூலிக்கப்பட்ட கட்டணங்கள் 01.09.2006 அன்று முதல் மாண்புமிகு முத்தமிழ் அறிஞரால் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அமைப்புச்சாரா தொழிலாளர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 01.11.2008 முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் (ச.பா.தி) அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன. மேலும், அமைப்புச்சாரா தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஏதுவாக 15.09.2009 முதல் கணினி மயமாக்கப்பட்டன. இவ்வாறு அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியதன் மூலம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வழியைப் பின்பற்றி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு, தமிழ்நாட்டில் 6 முதல் 9 வகுப்பு வரை கல்வி பயிலும் பதிவுபெற்ற உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.1000/-ம், மேலும் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் 10-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித்தொகை 1,000 ரூபாயிலிருந்து ஆண்டிற்கு 2,400 ரூபாயாக உயர்த்தி வழங்கவும், 11-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித்தொகை 1,000 ரூபாய் மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வரும் கல்வி நலத்திட்ட உதவித்தொகை 1,500 ரூபாய் ஆகியவை ஆண்டிற்கு 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும், பட்டப்படிப்பு படிப்பதற்கு 1,500 ரூபாய் மற்றும் முறையான பட்டப்படிப்பினை விடுதியில் தங்கி படிப்பதற்கு 1,750 ரூபாய் ஆகியவை ஆண்டிற்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கும் திட்டம் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு அத்திட்டமும் தற்போது நடைமுறைப்படுத்தப்படடுள்ளது. மேலும் கட்டுமானத் தொழிலாளர்களின் இயற்கை மரண உதவித்தொகை 20,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நலவாரியங்களில் பதிவு பெற்ற உறுப்பினர்களில் 50,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 01.12.2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவுபெற்ற உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், விருதுநகர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெ.காளிதாஸ் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், தொழிலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.