ரூ.20 லட்சம் மதிப்புள்ள கொரோனா பரிசோதனை செய்யும் கருவி: வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் துவக்கி வைத்தார்
விருதுநகர் அரசு மருத்துவமனையில் 17.07.2021 அன்று ரூ.20 லட்சம் மதிப்புள்ள ஆர்.டி.பி.சி.ஆர். தெர்மோசைக்ளர் (RTPCR Thermocycler) என்னும் கொரோனா பரிசோதனை செய்யும் கருவியை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் அவர்கள் ஆகியோர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு அவர்கள் ஆகியோர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் தெரிவித்ததாவது:
முதலமைச்சர் அவர்கள் கொரோனா நோய் தொற்றை முற்றிலும் கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அதற்கு தேவையான அனைத்து மருத்துவ உட்கட்டமைப்புகளையும் ஏற்படுத்திட தேவையான நடவடிக்கைகளை முதல்வர் அவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள்.
அதன்படி, விருதுநகர் அரசு மருத்துவமனையில் மைக்ரோபையாலஜி துறையில் செயல்படும் RTPCR லேபிற்கு தற்போது UNICEF நிறுவனம் ICMR மூலம் கொரோனா பாதிப்பை கண்டறிய உதவும் ரூ.20 லட்சம் மதிப்புள்ள RTPCR Thermocycler என்னும் கருவி பயன்பாட்ற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றரை மணி நேரத்தில் 90-&94 வரையிலான மாதிரிகளை ஒரே நேரத்தில் பரிசோதனை செய்ய இயலும். ஒரு நாளைக்கு சுமார் 1000 மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும்.
மேலும், இக்கருவி மூலம் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு குறுஞ்செய்தி (Sms) மற்றும் இணையதளம் (Website) மூலம் தங்கள் பரிசோதனை முடிவுகளை அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
RTPCR பரிசோதனைக்கு உட்படுபவர்கள் அளிக்கும் கைப்பேசி எண்ணிற்கு பரிசோதனை முடிவுகள் வந்தடையும். பொதுமக்கள் பரிசோதனை முடிவுகளை http://vnrmccovidreports.in என்ற இணையதளத்தின் மூலம் காணவும், அச்சிடவும், தரவிறக்கவும் செய்யவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது எனவும் விருதுநகர் மாவட்டத்தில் இந்த கருவி முதல்முறையாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது எனவும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
முன்னதாக, விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர், புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி ஆகியவற்றை நகராட்சி மூலம் விரைவில் ஏற்பாடு செய்து, வட்டார போக்குவரத்துத் துறை, போக்குவரத்துத் துறை மற்றும் நகராட்சித் துறை ஆகிய துறைகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தி விரைவில் புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்கள் அறிவுறுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், விருதுநகர் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சங்குமணி, நுண்ணுயிரித் துறை தலைவர் அனுராதா, அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.பழனிகுமார், உறைவிட மருத்துவர் மரு.அரவிந்த் பாபு, மூத்த மருத்துவர் மரு.அன்புவேல் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.