விதிகள் எதையும் பின் பற்றாமல் இரவு பகலாக இயங்கும் குவாரிகள்!கோவைப்பகுதியை பாதுகாக்கும் எண்ணமின்றி கனிமவளத்துறை!?
தமிழகத்தில் பசுமை போர்த்திய, தொன்மை சின்னங்கள் நிறைந்த குறிப்பிட்ட அளவு மலைகள் இன்று பெரும்பள்ளங்களாக மாறிவிட்டன. கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கற்களும், இதர கனிமங்களும் வெட்டி எடுக்கப்பட்டு உள்ளூர் தேவைகளுக்காகவும், வெளிமாநிலங்களுக்கு சட்ட விரோதமாகவும் கடத்தப்பட்டு வருகின்றன.
தொழிற்சாலை பகுதி என்றால் பகலில் 75 டெசிபலும், இரவில் 70 டெசிபலும் ஓசை அனுமதிக்கப்படுகிறது. குடியிருப்பு பகுதி என்றால் பகலில் 55 டெசிபலும், இரவில் 45 டெசிபலும் அனுமதிக்கப்படுகிறது.
கோவை மாவட்டம் காரமடை நகராட்சி பகுதியில் அமைந்துள்ள கரியமலை பகுதியில் 15 வருடமாக கல்குவாரிகள் இயங்காமல் இருந்த நிலையில் தற்போது தனியாருக்குச் சொந்தமான 9 ஏக்கர் நிலத்தில் கல்குவாரி அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே இப்பகுதியில் கல்குவாரி அமைந்தால் சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது
ஆனால்,கோவையில் மதுக்கரை, அன்னூர், சோமனூர், காரமடை, பேரூர், செட்டிபாளையம், சூலூர், பாப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 120-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இவற்றில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட கல்குவாரிகள் தற்போது இயங்கி வருகின்றன.
இயற்கை எழில் சூழ்ந்த கோவைப்பகுதியை பாதுகாக்கும் எண்ணமின்றி, கல் குவாரிகள் இரவு பகலாக இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான குவாரிகள் இந்த விதிகள் எதையும் பின்பற்றுவதில்லை. அத்துடன் அதிகப்படியான மரம் சூழ்ந்த மலைப்பகுதிகள், விவசாய நிலத்தை ஒட்டிய பகுதிகள், நீர்நிலைப்பகுதிகளில் குவாரிகள் அமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கல்குவாரிகளை பொறுத்தவரை, ஒவ்வொரு குவாரிக்கும் தனித்தனியாக அனுமதி அளிக்கப்படுகிறது. குறிப்பாக குவாரி அமைக்கப்படும் நிலம் குடியிருப்பு பகுதி மற்றும் விவசாய நிலத்தில் இருந்து குறிப்பிட்ட தொலைவில் இருக்க வேண்டும்.
பசுமை போர்த்திய மலைகளில் குவாரிகள் அமைக்கக்கூடாது. அனுமதியளிக்கப்பட்ட குறிப்பிட்ட பரப்பு அதாவது 10 எக்டேர் என்றால் அந்த நிலப்பரப்பின் வரைபடத்தின் அடிப்படையில் அந்த நிலத்தில் மட்டுமே கல் வெட்டி எடுக்கப்பட வேண்டும். கல் வெட்டி எடுக்க வெடிபொருள் பயன்படுத்தப்பட்டால், அதன் அளவுகள், வெடிபொருள் பயன்பாடு மற்றும் குவாரிப்பணிகளின் போது எழும் ஒலி அளவு, காற்று மாசுபாட்டின் அளவு ஆகியவை எந்த அளவில் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு குவாரிக்குமான அனுமதியின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டங்களிலுள்ள மலைகளிலும், குன்றுகளிலும் அனுமதிக்கப்பட்ட அளவைவிட கூடுதலாக பாறைகளை உடைத்து கேரளத்துக்கு கடத்துவது கடந்த 20 ஆண்டுகளாகவே நீடிக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சிலவற்றை பாதுகாக்கப்பட்ட மலைகளாக யுனெஸ்கோ அறிவித்திருக்கிறது. இதுபோல் சில மலைகள் பாதுகாப்பு குழுமத்தின்கீழ் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.
தமிழகத்திலிருந்து முறைகேடாக டன் கணக்கில் பாறைகளை கேரளத்துக்கு கடத்துவது தமிழகத்தில் பலருக்கு செல்வம் கொழிக்கும் தொழிலாகியிருக்கிறது. இவற்றை தடுக்க நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கடத்தலுக்கு உடந்தையாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அனைத்து குவாரிகளுக்கும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திலிருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும். குவாரிகள் பலவற்றுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படவில்லை. அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வது இல்லை. இஷ்டத்துக்கு பாறைகளை உடைக்கின்றனர். பணத்துக்காக கேரளத்துக்கு கனிமவளங்களை கடத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் நிதர்சனம்.
தமிழகத்தில் இருந்து கனிமங்கள் கொண்டு செல்வதை தடுக்க தனி சட்டம் இல்லை என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். குவாரிகளில் எடுக்கப்படும் கற்களை தமிழகத்தில் விற்க 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்தால் 20 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
எது எப்படியோ கடந்த அதிமுக ஆட்சியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டவர்கள் தற்போதைய திமுக ஆட்சியிலும் கவனிக்க வேண்டியவர்களை கவனித்து குவாரிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் என்பதுதான் நிதர்சனம்.
குற்றச்சாட்டின் மீது தமிழக அரசின் நடவடிக்கையை பொறுத்திருந்து பார்ப்போம்