விவசாயிகள் என்ற பெயரில் அனுமதி பெற்று சட்ட விரோதமாக வண்டல் மண் கடத்தல்!உடந்தையாக செயல்படும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா!?
கோடை காலத்தில் நீர் இருப்பு குறைவாக இருக்கும் போது, ஏரிகளில் வண்டல் மண் எடுக்க,விவசாயிகள்
பயன்பாட்டுக்காக ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க வேளாண்துறை அனுமதி அளித்துள்ளது.விவசாயிகள் பயன்பெறும் வகையில் அரசு புறம்போக்கு நீர் நிலைகளில் படிந்துள்ள மண், வண்டல் மண்ணை விவசாய பணிகளுக்காக இலவசமாக எடுத்து செல்ல ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் ஒவ்வொரு ஆண்டும் மழை பருவத்திற்கு முன்பு குளங்கள், ஏரிகள் துார்வாரப்பட்டு அதில் உள்ள வண்டல் மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப் பட்டு வருகிறது.பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி கண்மாய் குளங்களில் இருந்து விவசாய நிலங்களை மேம்படுத்துவதற்காக இலவசமாக வண்டல் மண் எடுத்துச் செல்ல தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 விதி 12 (2)ன் கீழ் அனுமதி கோரி விண்ணப்பம் வழங்கப்படுகிறது.
கண்மாயில் படிந்துள்ள கனிமம் மண் அல்லது வண்டல் மண் என்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அங்கீகரிக்கப்பட்ட சோதனை சாலை ஆய்வகத்தில் இருந்து மண் பரிசோதனை அறிக்கை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அல்லது ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் பெற்றுக்கொள்ள வேண்டும். அதன்பின் வண்டல் மண் எடுத்துச் செல்ல மாவட்ட ஆட்சியரின் உத்தரவு ஆணை பெற்றவுடன் அதன்படி மனுதாரர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியருடன் ஒரு ஒப்பந்த பத்திரம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் அதன் பின்னரே கண்மாயிலிருந்து வண்டல் மண் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.சிட்டா, அடங்கல், கிராம நிர்வாக அலுவலர் சான்று, புலவரைபடம் மற்றும் கிரைய பத்திர நகல் ஆகிய ஆவணங்களுடன் தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதன்படி நஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 185 கன மீட்டர் வண்டல் மண்ணும், புஞ்சை நிலங்களின் மேம்பாட்டிற்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 222 கன மீட்டர் வண்டல் மண்ணும்,தரைமட்ட மேல் பகுதியில் இருந்து ஒரு மீட்டர் ஆழம் வரை மட்டுமே வரையறை செய்யப்பட்ட இடத்தில் மட்டுமே கனிமம் எடுப்பேன் கரைப்பகுதி அங்கீகரிக்கப்பட்ட பாதையாக இருந்ததால் மட்டுமே பயன்படுத்துவேன் என்று உறுதிமொழி அளிக்க வேண்டும்.. அனுமதிக்கப்பட்ட ஏரி மற்றும் குளங்களில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை வேளாண் பெருமக்கள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவரின் அனுமதியினைப் பெற்று இலவசமாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பொதுப்பணித்துறை கண்மாயில், அரசின் சட்ட விதிகளை காற்றில் பறக்க விட்டு மாவட்ட ஆட்சியரின் உத்தரவை மதிக்காமல் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதியுடன் இயற்கை வளங்களை அழித்து கனிம வளம் கடத்தி இயற்கை வளங்களை அழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மதுரை சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தின் மேற்பகுதியில் பொதுபணித்துறைக்கு சொந்தமான சுமார் நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசனக்கண்மாய் உள்ளது, இக்கண்மாய் நீர் பாசனத்தால் பலநூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பலன் பெறுகிறது, இந்த கண்மாயில் மீன்வளத்துறை மீன்களை வளர்க்க அனுமதி அளித்து அதன் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது, இந்த கண்மாய் க்கு வரும் நீர் வழி பாதை முழுவது கரைகள் சேதம் அடைந்தும் அது மட்டும் இல்லாமல் நீர்வழிப் பாதை முழுவதும் புதர் முண்டி, இருப்பது மட்டுமில்லாமல் குப்பைகளை கொட்டி அடைப்பு ஏற்படுத்தியும் உள்ளதால் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால்அதனை சீர்செய்ய விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் செவி சாய்க்காத பொதுபணித்துறை விவசாயிகள் என்ற போர்வையில் கண்மாய் உட்பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் நூற்றுக்கணக்கான டிராக்டர்கள் மூலம் கரம்பை மண்ணை அள்ளி கடத்திக் கொண்டு போவதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் விவசாயிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசியல்வாதிகள் தங்களுக்கு சொந்தமான தோட்டம்,தென்னந்தோப்புகளில், கண்மாயில் உள்ள கரம்பை மண்ணை டிராக்டர்களில் அள்ளி குவித்து வருகின்றனர்.
இதனை சம்பந்தபட்ட அதிகாரிகள் கண்டு கொள்ளுவதே இல்லை, இந்த கண்மாயில் அனுமதி என்ற பெயரில் வண்டல் மண்ணை வாரி சுருட்டும் போலி விவசாயிகளை தண்டிக்காமல், கண்மாய் மண்ணை அவர்களுக்கு அள்ளிக்கொடுக்கிறது, ஒரு விவசாயிக்கு பத்து முதல் இருபத்தி ஐந்து யூனிட் கண்மாய் மண் அள்ள அனுமதி பெற்று, கண்மாய் மண்ணை விற்பனை செய்கிறது, அனுமதிக்கபட்ட அளவை விட அளவுக்கு அதிகமாக கரம்பை மண்ணை வெட்டி கடத்திச் சென்றதால் நீர் நிலை, கண்மாய் பாழாய் போனது என வேதனை தெரிவிக்கின்றனர்,
இது சம்பந்தமாக பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி கூறுகையில் கண்மாய் வண்டல் மண் அள்ள விவசாயிக்கு டிராக்டர் ஒன்றுக்கு ஒரு யூனிட் மட்டுமே என்றும், விவசாயிகள் தங்கள் விளை நிலங்கள் விபரங்களை எங்களிடம் தந்து அதற்கு உரிய அனுமதியை கனிமவளத்துறை மூலம் பெற்று தந்துள்ளோம், மேலும் விவசாயிகள் போர்வையில் அளவுக்கு அதிகமாக கண்மாயில் மண்ணை டிராக்டர்களில் அள்ளி சென்றால் அனுமதி ரத்து செய்ய படும் என்று போனில் தெரிவித்தார் ஆனால் இந்த கண்மாயில் டிராக்டர்கள் மூலம் பல ஆயிரம் யூனிட் மண்ணை அள்ளிச்சென்றது தெரிகிறது, இதனை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், ஏழை விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர், இந்த கண்மாய் மண்ணை கொள்ளை அடிப்பதால், கண்மாய் அருகே உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடிநீர் குறைந்து வருவதாக கூறுகிறார்கள், கண்மாய்களில் விவசாயத்திற்கு என்ற பெயரில் நீர்நிலை கண்மாய்க்களை காப்பாற்ற மண் கொள்ளை அடிப்பதை தமிழக முதல்வர் தடை விதிக்க வேண்டும். என விவசாயிகள் கோரிக்கையாக உள்ளது.
எது எப்படியோ மதுரை மாவட்ட ஆட்சியராக தற்போது பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் அவர்கள் சட்ட விரோதமாக கனிம வளங்களை கொள்ளையடிக்கும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் சமூக ஆர்வலர்கள் தற்போது இருக்கிறார்கள். அந்த நம்பிக்கையை வீண் போகாமல் மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நேரடி ஆய்வு செய்த வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.