வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க பருத்தி மற்றும் பயிர் அறுவடை நிலை குறித்து குழு ஆய்வு!
தமிழகம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிர்கள் மற்றும்மானாவாரி மாவட்டங்களில் வரட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் அறுவடை பரிசோதனை ஆய்வு குறித்து பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் கருணாகரன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
விருதுநகர் மாவட்டம்
மூளிப்பட்டியில் பயிர் அறுவடை நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி அவர்கள் முன்னிலையில், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் முனைவர்.மு.கருணாகரன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை சார்பில் பயிர் மதிப்பீட்டு ஆய்வு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பயிர்களின் சராசரி மகசூல் அறிந்து கொள்ளுதல், உள்ளீடு மற்றும் உற்பத்தி விகிதாச்சாரம் அறிந்து கொள்வது இதன் நோக்கமாகும். இதற்காக மாதிரி கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு பயிர் அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, களப்பணிகள் பல்வேறு நிலையில் ஆய்வு செய்யப்படுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில், பயிர் அறுவடை பரிசோதனை திட்டத்தின் கீழ் நெல், சிறுதானியங்கள், நிலக்கடலை, எண்ணெய் வித்துக்கள், கரும்பு, பருத்தி, பாசிப்பயறு, உளுத்தம்பயிறு, சிறுபான்மைப் பயிர்களான வெங்காயம், கொத்தலல்லி, பழம் மற்றும் காய்கறிகள் ஆகிய பயிர்களில் பயிர் அறுவடை பரிசோதனை மாவட்டம் முழுவதும் தற்போது நடைபெற்று வருகிறது.
அதனடிப்படையில், இன்று விருதுநகர் வட்டம் மூளிப்பட்டியில் பயிர் அறுவடை நிலை குறித்து மாவட்ட ஆட்சியர் .ஜெ.மேகநாதரெட்டி,அவர்கள் மற்றும் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை ஆணையர் முனைவர்.மு.கருணாகரன்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் பயிருக்கு கிராம அளவிலும், இதர பயிர்களுக்கு குறுவட்ட அளவிலும் விளைச்சல் விவரங்கள் கணித்து வெள்ளம் மற்றும் வறட்சி காலங்களில் உத்திரவாத மகசூலுக்கு குறைவாக விளைச்சல் கிடைக்கப்பெறும் பொழுது விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை பெற்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். அனைத்து விதமான இயற்கை சீற்றங்களால் ஏற்படும் மகசூல் இழப்புகளுக்கு இத்திட்டம் மூலம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மங்களராமசுப்பிரமணியன், இணை இயக்குநர்(விவசாயம்) உத்தண்டராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) .சங்கர் எஸ்.நாராயணன், மண்டல புள்ளியியல் இணை இயக்குநர் .B.ஹரிஹரதாஸ், மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் .கே.சங்கரவேல் பாண்டியன், மண்டல உதவி இயக்குநர்கள், விருதுநகர் வட்டாட்சியர் செந்தில்வேல், அரசு அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.