விருதுநகர் மாவட்டம்
114- வது தேவர் ஜெயந்தி மற்றும் 59வது தேவர் குருபூஜை தொடர்பான
ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (20.10.2021) 114 வது தேவர் ஜெயந்தி மற்றும் 59 -வது தேவர் குருபூஜை (29.10.2021 முதல் 30.10.2021 வரை) நடைபெறுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.மனோகர் அவர்கள் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர்
ஜெ.மேகநாதரெட்டி சமுதாயத் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்கி தெரிவிக்கையில்,
114 வது தேவர் ஜெயந்தி, மற்றும் 59 -வது குருபூஜையை முன்னிட்டு தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவுரைகளின் படி கு.வி.மு.ச பிரிவு-144 ன் கீழ் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் பொது மக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.
மரியாதை செலுத்த செல்ல விரும்பும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் (5 நபர்களுக்கு மிகாமல்) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான முன் அனுமதியை பெற்று அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி உரிய சமூக இடைவெளியை கடைபிடித்து மரியாதை செலுத்த அனுமதிக்கப்படுகிறது.
அனுமதி பெற விரும்பும், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் பிரதிநிதிகள் 24.10.2021-ம் தேதிக்குள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.
மரியாதை செலுத்த செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்று திரும்ப வேண்டும். மரியாதை செலுத்த செல்பவர்கள்; கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் மரியாதை செலுத்த வேண்டும். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் அனுமதி பெற்று, மரியாதை செலுத்த சொந்த வாகனங்களில் செல்பவர்கள், வாகன உரிமையாளரின் பெயர், முகவரி, கைபேசி எண், வாகன ஒட்டுனர் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணுடன் கூடிய முகவரி, வாகன பதிவு எண், வாகன அனுமதி (Own Board Permit) பற்றிய விபரம் மற்றும் செல்லும் வழித்தடம் ஆகியவற்றை சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் சமர்ப்பித்து முன் அனுமதி பெற்று Vehicle Pass பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு முன் அனுமதி பெறும்பொழுது வாகனத்தின் RC மற்றும் வாகன ஒட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களின் நகல்களை சமர்பிக்க வேண்டும் இந்த அனுமதிச் சீட்டினை பயணத்தின் போது வாகனத்தின் முன்புறக் கண்ணாடியில் ஒட்டியிருக்க வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் கமுதி-பசும்பொன் நினைவிடத்திற்கு செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
உரிய அனுமதி பெற்று மரியாதை செலுத்த செல்பவர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்கு ஏதுவாக கட்டாயம் முகக்கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடைபிடித்தும் மற்றும் அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றியும் மரியாதை செலுத்த வேண்டும். வாடகை வாகனங்கள் (T.Board) மற்றும் திறந்த வெளி வாகனங்களில்(Open type) செல்ல அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் (TATA ACE) வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் பயணம் செய்யவோ, நடைபயணமாகவோ செல்ல அனுமதி இல்லை. வாகனத்தின் மேற்கூரையில் பயணம் செய்யக் கூடாது.
வாகனங்களில் ஆயுதங்கள், பட்டாசுகள், மது பாட்டில்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்வது, வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்வது போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளன. அஞ்சலி செலுத்த செல்லும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது.
அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் செல்லுதல், தலைவர்களின் வேடமணிந்து செல்லுதல் ஆகியவற்றிற்கும் அனுமதி இல்லை. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி செல்லவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனங்களில் செல்லும் பொழுது வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது.
பொது இடங்களில் உருவ படங்களை வைத்து மரியாதை செலுத்த அனுமதி இல்லை. பொது இடங்களில் ஒலிபெருக்கி வைத்தல், வெடிபோடுதல், சமுதாய கொடி ஏற்றுதல், கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் போன்றவற்றிற்கும் அனுமதி இல்லை. ஜோதி, முளைப்பாரி மற்றும் பால்குடம் ஆகியவற்றிற்கும் அனுமதி இல்லை. ஊர்வலமாக செல்வதற்கும் அனுமதி இல்லை.
பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்பவர்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட கீழ்கண்ட வழித்தடங்களில மட்டுமே செல்லவேண்டும்.
இராஜபாளையம் – ஸ்ரீவில்லிபுத்த}ர் – சிவகாசி – சாத்தூர்; – விருதுநகர் – தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து புறப்பட்டு பசும்பொன் செல்லும் வாகனங்கள் கீழ்க்குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக மட்டுமே சென்று திரும்ப வேண்டும்.
அருப்புக்கோட்டை – காந்தி நகர் – இராமலிங்கா மில் – கல்லூரணி – எம்.ரெட்டியபட்டி – மண்டபசாலை – கமுதி விலக்கு (கானாவிலக்கு) – கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.
ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் கல்குறிச்சி – பாலையம்பட்டி பை-பாஸ் – காந்தி நகர்- இராமலிங்கா மில், கல்லூரணி – எம்.ரெட்டியபட்டி – மண்டபசாலை – கமுதி விலக்கு (கானாவிலக்கு) – கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.
திருச்சுழியிலிருந்து வரும் வாகனங்கள் இராமலிங்கா மில், கல்லூரணி, கமுதி விலக்கு (கானாவிலக்கு), கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.
நரிக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் சென்றடைய வேண்டும். பின்னர் மீண்டும் திரும்பும்பொழுது, பசும்பொன் – கோட்டைமேடு – நகரத்தார்குறிச்சி -அபிராமம் வழியாக பார்த்திபனூர் – பிடாரிசேரி – வீரசோழன் விலக்கு வழியாக வரவேண்டும்.
மேற்படி விழாவிற்கு செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முத்துராமலிங்கபுரம்-புதூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது. என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி.,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.இக்கூட்டத்தில், சார் ஆட்சியர் (சிவகாசி) திரு.பிருத்திவிராஜ்,இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.