444.71 கோடி ரூபாய் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது!
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் பழைய அரசு மருத்துவமனை எதிரில் உள்ள எம்.ஏ.சி பூங்காவில் (18.07.2021); தாமிரபரணி ஆற்றினை நீராதாராமாகக்கொண்டு சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை நகராட்சிப்பகுதிகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டத்தில், சாத்தூர் நகராட்சி பகுதிகளுக்கான ரூ.21.76 கோடி மதிப்பிலானப் புதியக்கூட்டுக்குடி நீர்த்திட்டத் திற்கானத் திட்டப்பணிகளை சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் ஜி.அசோகன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்தார்
பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பேசிய போது
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழியில் செயல்படும் தமிழக அரசு, மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய நகராட்சிகளுக்குட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது, புதிய கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான வடிவமைக்கப்பட்ட கூடுதல் குடிநீர்த் தேவையான 28.28 மில்லியன் லிட்டர் அளவு தாமிரபரணி ஆற்றின் மேற்பரப்பு நீரை, தாமிரபரணி மற்றும் சிற்றாறு நதிகள் கலக்குமிடத்தில், சீவலப்பேரி தடுப்பணைக்கு முன்பாக 8 மீட்டர் விட்டமுள்ள ஒரு உள் எடுக்கும் கிணறு மூலமாக எடுத்து ஆற்றின் கரையோரமாக சீவலப்பேரி கிராமத்தில் அமைக்கப்படவுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்யப்படவுள்ளது. பின்னர் சில்லான்குளம், வன்னிமடை மற்றும் சென்னல்குடி ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள இடைநிலை நீருந்து நிலையங்களில் நீர் உந்தப்பட்டு மூன்று நகராட்சிகளில் தனித்தனியே தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் குடிநீர் சேகரிக்கப்படவுள்ளது.
பின்னர், இம்மூன்று நகராட்சிகளில் அமைந்துள்ள தற்போதைய மற்றும் புதியதாக அமையவுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து புதிய பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டு வீட்டிணைப்பு மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும்.
இத்திட்டம் முடிவுறும் தருவாயில் சாத்தூர் நகராட்சிக்கு, தற்போதைய குடிநீர் தவிர கூடுதலாக, தற்கால (2020) மக்கள் தொகையின்படி, 33,970 மக்களுக்கு 22.8 லட்சம் லிட்டர், இடைக்காலம் (2035) மக்கள் தொகையின்படி, 37,770 மக்களுக்கு 26.2 லட்சம் லிட்டர் மற்றும் உச்சகால (2050) மக்கள் தொகையின்படி, 41,990 மக்களுக்கு 32.5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ், சாத்தூர் நகராட்சிக்கு புதிதாக ஒரு 1.45 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு அதிலிருந்து புதிதாக கட்டப்படவுள்ள 2.00 லட்சம் லிட்டர், 3.00 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள இரண்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் ஏற்கனவே கட்டப்பட்டுள்ள 5 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு, அனைத்து தெருக்களுக்கும் புதிதாக பகிர்மான குழாய்ககள் 40.542 கிலோ மீட்டர் தொலைவுக்கு பதிக்கப்பட்டு 13,340 வீட்டிணைப்புகள் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் பொதுவான பணிகளில் இதுவரை 26 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் 4ஃ2022 ல் முடிக்க இலக்கிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவடையும் போது நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 135 லிட்டர் வீதம் குடிநீர் கிடைக்கப்பெறும் எனவும், சாத்தூர் பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும் என்றும், மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் குடிநீர் திட்ட பணிகள் முறையாக செயல்படுத்தி குடிநீர் தட்;டுப்பாடு இல்லாத மாவட்டமாக மாற்றப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் .கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், நிர்வாகப் பொறியாளர் .ஜெயப்பிரகாஷ், உதவி நிர்வாகப் பொறியாளர் திரு.தட்சிணாமூர்த்தி, உதவிப் பொறியாளர்கள் திரு.தமிழ்செல்வன், த.முருகன், நகராட்சி ஆணையாளர் ராஜமாணிக்கம், நகராட்சி பொறியாளர் பாண்டியராஜன், மற்றும் சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.