மாவட்டச் செய்திகள்

இடம் இருக்கு ! அரசு கட்டிக் கொடுத்த  வீட்டை காணோம்!
நான்கு வருடமாக வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்!

திருப்பூர் மாவட்டத்தில் அரசு கட்டிக் கொடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் !


பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசால் 25 ஜூன் 2015 அன்று தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் வீடுகள் இல்லாதவர்கள் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ பலன் பெறுவார்கள். இதற்கு சில தகுதிகள் இருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் இருந்தால் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாத்திட்டத்தில் 60% விழுக்காடு மத்திய அரசு நிதி 40% விழுக்காடு மாநில அரசு நிதி என்ற விகிதத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது ஒரு மத்திய அரசு திட்டமாகும். ஊரக பகுதியில் 2022-க்குள் வீடுகள் இல்லாதவர்களுக்கும் மற்றும் பழுதடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி தருவதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.வீடுகள் கட்ட தேவையான நிலப்பரப்பு 269 சதுரடி இருக்க வேண்டும்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் பொருளாதாரத்தில்  பின் தங்கியவர்களுக்கு வீடு இல்லாதவர்களை கண்டறிந்து அதன் மூலம் பயனாளிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
தகுதிகள்
வீடு இல்லாத பயனாளிகள்.
ஆதரவற்ற கைவிடப்பட்டவர்கள் மற்றும் பிச்சை பெறுபவர்கள்.
மனித கழிவுகளை கையால் எடுத்து அப்புறப்படுத்துபவர்கள்.
புராதான மலைவாழ் மக்கள்.
சட்டபூர்வமாக விடுவிக்கப்பட்ட கொத்தடிமைகள். இவர்கள் அனைவருக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் வீட்டின் மதிப்பு 2.25 லட்சம் ரூபாய்.
நீங்கள் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால்,
ஆதார் அட்டை அல்லது ஆதார் எண்
புகைப்படம்
பயனாளியின் வேலை அட்டை அல்லது வேலை அட்டை எண்
வங்கி பாஸ் புத்தகம்
ஸ்வச் பாரத் மிஷன் (SBM) பதிவு எண்
கைபேசி எண் உங்களிடம் பின்வரும் ஆவணங்கள் இருக்க வேண்டும்.
இந்த ஆவணங்களை எல்லாம் போலியாக தயாரித்து திருப்பூர் மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டிக் கொடுத்ததில் முறைகேடு நடந்திருப்பதாக  சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை
குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 உராட்சிகள் உள்ளது. குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் மட்டும் குறைந்தது 20க்கும் மேற்பட்ட வீடுகள் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு முறைகேடாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். இது
சம்பந்தமாக உடுமலை குடிமங்கலம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் விசாரணை செய்த போது

மாற்றுத் திறனாளியான பழனிச்சாமியின்

மாற்றுத்திறனாளி பழனிச்சாமியின் ஆதார் வைத்து பழனி தந்தை பெயர் ரங்கன் என்ற பெயர் உள்ள மற்ற நபருக்கு அந்த ஆதார் நம்பரை  மாற்றி முறைகேடு செய்து வீடு கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதார் நம்பரை முறைகேடாக பயன்படுத்தி வீடு கட்டி வேறொரு நபருக்கு அந்த வீட்டை கொடுக்க ஊராட்சி மன்ற செயலர் ஒரு லட்ச ரூபாய் வாங்கியதாகவும் அது சம்பந்தமாக  திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் தொடர்ந்து மாற்றுத்திறனாளி பழனிச்சாமி   புகார் கொடுத்துள்ளார்.அந்தப் புகாரின் மீது விசாரணை நடத்தியதில் முறைகேடு செய்துள்ளது உறுதியான நிலையிலும் முறைகேடு செய்த அதிகாரிகள் மீது துறை ரீதியாக எந்த நடவடிக்கையும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் எடுக்காததால் மன உளைச்சலில் மாற்றுத் திறனாளி இறந்து விட்டதாகவும் அவரது மனைவி கடந்த வாரம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மீண்டும் புகார் மனு கொடுத்துள்ளதாகவும் தற்போது அந்த மனு மீதும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது என்னவென்றால்
திருப்பூர் மாவட்டம் உடுமலை தாலுகா குடிமங்கலம் வட்டாரம் ராமச்சந்திராபுரம் அஞ்சல் இலுப்பநகரம்   என்ற கிராமத்தில் வசித்து  வருபவர் பழனிச்சாமி (தகப்பனார் பெயர் திருமண்) இவர் ஒரு மாற்றுத்திறனாளி.
இவர் கடந்த அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் வீடு கேட்டு மனு கொடுத்துள்ளார்.
ஆனால் அவருக்கு வீடு கட்டித் தரவில்லை அதனால்.2020/2021 ஆண்டு மீண்டும் வீடு கேட்டு மனு செய்துள்ளார்.
அப்போது வீடு கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் 2018/ 2019 ஆம் ஆண்டுக்கான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தில் TN.19 78 62 9 என்ற எண்ணில் வீடு கட்டி கொடுக்கப்பட்டதாகவும்  மாற்றுத்திறனாளியான பழனிச்சாமி அவர்களுக்கு தெரிய வந்துள்ளது.
உடனே இலுப்ப நகரம் ஊராட்சி மன்ற செயலாளர் இடம் இது சம்பந்தமாக கேட்டபோது
பழனிச்சாமி தகப்பனார் பெயர் ராமன் என்பவருக்கு

பழனிச்சாமி தந்தை பெயர் ராமன் என்பவர் பெயரில் முறைகேடாக கட்டிக் கொடுத்த வீடு

வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அதன்பின்பு இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளியான பழனிச்சாமி புகார் கொடுத்துள்ளார் அந்த புகாரில்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் மூலம் என் பெயரில் வீட்டைக் கட்டி  வேறொரு நபரான ஒரே பெயர் கொண்ட பழனிச்சாமி த/பெ ராமன் நபருக்கு வீட்டை கொடுத்து முறைகேடு செய்துள்ளார்கள் என்றும் முறைகேடு  செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீடு இல்லாத எனக்கு வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இரண்டு வருடங்களுக்கு  பின்பு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் குறை தீர்ப்பாளர் எம் பிரமலாதா முன்னிலையில் 29/09/2023 அன்று
விசாரணை நடைபெற்றது. அந்த விசாரணையில் புகார் தாரர் மாற்றுத்திறனாளியான பழனிச்சாமி மற்றும்
இலுப்ப நகரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமலைசாமி , இலுப்ப நகரம் ஊராட்சி செயலர் மகாலிங்கம் , திட்ட ஒருங்கிணைப்பாளர் வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி குடிமங்கலம் ,வட்டாரம் பணி மேற்பார்வையாளர் ஓவர்சீர்
உதவி பொறியாளர் மண்டல உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் குடிமங்கலம் ,ஊராட்சி ஒன்றியம் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் அப்போது பணியில் இருந்த பணிதள பொறுப்பாளர் ஆகிய அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது உறுதியானதை அடுத்து முறைகேடில் ஈடுபட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற செயலாளர் ஆகியோர்  சட்ட ரீதியாகவும் துறை ரீதியாகவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் குறை தீர்ப்பாளர் எம் பிரமலாதா  பரிந்துரை செய்துள்ளார். ஆனால்  மனசாட்சியே இல்லாமல் மாற்றுத் திறனாளி வீட்டை முறைகேடு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த மாற்றுத்திறனாளி பழனிச்சாமி சில மாதங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார்.
விசாரணை நடத்தி  தக்க ஆதாரங்களுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் பரிந்துரை செய்தும் மாற்றுத்திறனாளிக்கு எந்த தீர்வும் காணாமல் முறைகேடில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது  நடவடிக்கை எடுக்காமல் திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  மௌனம் காத்து வருவதற்கு காரணம் என்ன என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடந்த 1/07/2024 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம்  மறைந்த மாற்றுத்திறனாளியின் மனைவி நேரில் கோரிக்கை மனு கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ கடந்த அதிமுக ஆட்சியில்  ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது தற்போது திமுக ஆட்சியில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காத்து வருவதால்
மாற்றுத்திறனாளி கணவனை இழந்த பெண்ணிற்கு இலவச வீடு கட்டித்தர தமிழக முதல்வர்  நடவடிக்கை எடுக்க வேண்டும் . அது மட்டுமில்லாமல் திருப்பூர் மாவட்டத்தில் கட்டிக்குடுத்த நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் முறைகேடு நடந்திருப்பதாக சமூக ஆர்வலர்கள் வைக்கும் குற்றச்சாட்டிற்கு நேர்மையான அதிகாரிகளை நியமித்து விசாரணை மேற்கொண்டு முறைகேடில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.








Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button