உலகம்

உயிரிழப்பை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான அரியவகை கேண்டிடா ஆரிஸ் தொற்று!

கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் இன்னும் இயல்பு வாழ்கைக்கு திரும்பவில்லை. இதனிடையே, கருப்பு, மஞ்சள், பச்சை என பூஞ்சை தொற்றுகளும் பரவி வருகின்றன.

இந்த நிலையில், உயிரிழப்பை ஏற்படுத்தும் கேண்டிடா ஆரிஸ் (Candida Auris) தொற்று அமெரிக்காவில் பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டல்லாஸ் மற்றும் வாஷிங்டனில் உள்ள மருத்துவமனைகளில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள தகவலின்படி இதுவரை வாஷிங்டனில் 101 பேருக்கும், டல்லாஸ் மாகாணத்தில் 22 பேருக்கும் கேண்டிடா ஆரிஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நியூயார்க்கில் பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கேண்டிடா ஆரிஸ் என்கிற இந்த பூஞ்சை தொற்றை உலகளாவிய சுகாதார அச்சுறுத்தல் என்று கூறியுள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவர் உயிரிழக்கும் நிலை உள்ளதால் இது மிகவும் ஆபத்தானது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேண்டிடா ஆரிஸ் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரண நோய் அறிகுறிகளுடன் காணப்படுவதால், இதனை கண்டுபிடிப்பது கடினம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேண்டிடா ஆரிஸ் பூஞ்சை தொற்று ரத்த ஓட்டத்தை பாதித்து மரணத்தை ஏற்படுத்தக் கூடிய வீரியத்தை பெற்றதாகும். நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டோரும், எதிர்ப்பு சக்தி குறைவானோரும் அந்தப் பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்படலாம்.

இந்த பூஞ்சை பெரும்பாலும் பராமரிப்பு நிலையச் சூழலில் தொற்றக்கூடியது. பல்வேறு மருந்துகளுக்கு எதிரான தடுப்பு சக்தியைக் கொண்டது என்பதாலும் ஆபத்து நிறைந்தவை என்கிறார்கள் சுகாதாரத்துறையினர். அறிகுறிகளை கண்டறிந்து நோயெதிர்ப்பு மருந்து கொடுத்தாலும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தினர்.

முன்னதாக, கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரில் 11 பேர் கேண்டிடா ஆரிஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில், இருவர் உயிரிழந்து விட்டதாகவும், எஞ்சிய 9 பேர் குணமடைந்து விட்டதாகவும் அப்போது அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

கேண்டிடா ஆரிஸ் நோய்த்தொற்றுகள் மருந்துகளுக்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கின்றன, சமீபத்திய ஆண்டுகளில் அவை ஏன் தொற்றுநோய்களை ஏற்படுத்தத் தொடங்கின என்பது பற்றி விஞ்ஞானிகள் தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button