குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இருவர், அதிரடியாக மாற்றம்.
கோவை:முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், குடிநீர் திட்டத்துக்கு பூமி பூஜை நடத்திய குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் இருவர், அதிரடியாக மாற்றப்பட்டனர்.
கோவை மாநகராட்சி பகுதியில் பில்லுார் மூன்றாவது குடிநீர் திட்டம், கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் துவக்கி வைக்கப்பட்டது.
‘பம்பிங் ஸ்டேஷன்’ கட்டுவதற்கான பூமி பூஜை, மேட்டுப்பாளையம் அருகே, 19ம் தேதி நடந்தது.
காலை 7:30 மணியளவில் தி.மு.க., நிர்வாகிகள் சிலர் வந்து சென்றனர்.அதன்பின் 10:30 மணியளவில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், அருண்குமார், அம்மன் அர்ச்சுனன், ஜெயராமன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முன்னிலையில், பூமி பூஜை நடந்தது.விழா தொடர்பாக, உயரதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் நடத்தியதாக, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மீது புகார் கூறப்பட்டது.
இதையடுத்து, நிர்வாக பொறியாளர் விவேகானந்தன் வேலுாருக்கும், உதவி நிர்வாக பொறியாளர் விஜயலட்சுமி மதுரைக்கும் மாற்றப்பட்டனர்.