மதுரை மாநகரத்தில் இரண்டு வருடமாக இரண்டு கிலோமீட்டர் உயர்மட்ட மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால் சாலைகள் குண்டும் குழியுமாக புழுதியால் காற்று மாசு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலால் அவதி! கோமாவில் இருக்கும் மதுரை மாநகராட்சி!நடவடிக்கை எடுக்குமா நெடுஞ்சாலைத்துறை!
கடந்த அதிமுக ஆட்சியில் 2020 ஆண்டு மதுரை தேனி ரோட்டில் 2 கிமீ தூரத்திற்கு உயர்மட்ட பாலம் கட்ட தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்து அதற்கான பணிகளை துவங்கியது.
ராமேஸ்வரத்திலிருந்து கொச்சின் வரையிலான தேசிய நெடுஞ்சாலை மதுரை வழியாக செல்கிறது. ஏற்கனவே மதுரை ராமநாதபுரம் வரை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு விட்டது. தற்போது மதுரையில் இருந்து தேனி வரையிலான தேசிய நெடுஞ்சாலையும் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டு, உசிலம்பட்டியில் இருந்து நாகமலைபுதுக்கோட்டை வரை ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் தேனி ரோட்டில், காளவாசல் முதல் முடக்குச்சாலை வரை ரோடு விரிவாக்கம் செய்யப்பட்டது.
விராட்டிபத்து, அச்சம்பத்து பகுதியில் ரோடு மிகவும் குறுகியதாக உள்ளதால், இந்த பகுதியில் விரிவாக்கம் செய்ய முடியவில்லைஎன்று இதற்கு பதிலாக இந்த 2 ஊர்களுக்குள் செல்லாமல் சுமார் 7 கி.மீ தூரத்திற்கு, புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இது, தேனி ரோட்டில் டிவிஎஸ் அடுத்து டிபிஎம் நகர் அருகே துவங்கி, விருதுநகர்- திண்டுக்கல் நான்குவழிச்சாலையில் இணைந்து, அங்கிருந்து நாகமலைபுதுக்கோட்டையை சென்றடைகிறது. இந்த நான்கு வழிச்சாலையில், முடக்குச்சாலையில் இருந்து, டிபிஎம் நகர் வரை அதிகமான வளைவுகள் மற்றும் இணைப்பு ரோடுகள் இருப்பதால், உயர்மட்ட பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இந்த உயர்மட்ட பாலம், தேனி ரோட்டில், பி.பி.சாவடியில் இருந்து, விராட்டிபத்து டிபிஎம் நகர் வரை சுமார் 2 கி.மீ தூரத்திற்கு அமைக்கப்பட்டுவருகிறது. இந்த பாலத்திற்காக தற்போது பி.பி.சாவடியில் இருந்து, டிபிஎம் நகர் வரை , அதற்கான பணி தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் இரண்டு கிலோமீட்டர் உயர்மட்ட மேம்பாலம் பணி நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்தப் பகுதியில் காற்று மாசு அதிகமாக இருப்பதாகவும் இதற்கு காரணம் அவர்களின் பக்கவாட்டு சாலைகளில் எந்தவித சாலை வசதி செய்யாமல் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதாலும் பாலத்திற்கு இரண்டு பக்கம் இருக்கும் சாலைகள் குண்டும் குழியுமாக மண் சாலைகளாக காணப்படுகிறது . இந்த மண் சாலைகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் அந்தப் பகுதியை புழுதி நிரம்பி காணப்படுகிறது இதனால் அந்தப் பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் அதுமட்டுமில்லாமல் அந்த சாலையில் உள்ள மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் இந்த காற்று மாசுவினால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு வருவதாக தகவல் வந்துள்ளது. இது சம்பந்தமாக நெடுஞ்சாலைத் துறைக்கு பொதுமக்கள் பல புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குண்டும் குழியுமாக மண் சாலைகளில் புழுதி பறக்காமல் தண்ணீர் அடித்து ஈரப்பதமாக இருந்தால் மட்டுமே காற்று மாசு இல்லாமல் வாகன ஓட்டிகள் சிரமமில்லாமல் செல்ல முடியும் என்றும் ஆகவே உடனடியாக மேம்பாலம் பணி முடியும் வரை பக்கவாட்டு சாலைகளில் தினந்தோறும் மாநகராட்சி சார்பாக தண்ணீர் அடித்து வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதேபோல் இரண்டு வருடமாக ஆமை வேகத்தில் நடந்து கொண்டுள்ள இரண்டு கிலோமீட்டர் தூர உயர்மட்ட மேம்பால பணியை துரிதமாக கட்டி முடிக்க தமிழக முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.