வெங்காய பயிரில் நோய் மற்றும் பூச்சித்தாக்குதல் ஏற்படுவதை குறைக்கலாம்.
பயிர் சுழற்சி முறையை பின்பற்றலாம்
வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் கவனத்திற்கு
விருதுநகர் மாவட்டத்தில், தற்போது கிணற்று நீர் பாசனத்தின் மூலம் திருவில்லிபுத்தூர் மற்றும் காரியாபட்டி பகுதிகளில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போதுள்ள பருவ காலத்தில் வெங்காய பயிரில் அடித்தாள் அழுகல் நோய், அடிச்சாம்பல் நோய், ஊதா கொப்புள நோய், திருகல் நோய் மற்றும் இலைப்பேன் ஆகிய நோய் மற்றும் பூச்சித்தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இலைப்பேன்:
1. இலை முழுவதும் வெண்திட்டுக்கள் காணப்படும் மற்றும் கடுமையாக தாக்கப்பட்ட இலைகள் நுனியில் இருந்து காயத் தொடங்கும்.
2. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.6 மிலி டைமீதோயேட் அல்லது 0.5 மிலி புரோபோனாஃபாஸ் என்ற வீதத்தில் கலந்து தெளிப்பதன் மூலம் இப்பூச்சியினை கட்டுப்படுத்தலாம்.
அடித்தாள் அழுகல் நோய்:
1. இந்நோயினால் பாதிக்கப்பட்ட இலைகள் மஞ்சள் நிறமாக மாறி பின்பு மற்றும் வெங்காயம் குமிழ் மென்மையாகி அழுகும்.
2. இந்நோயினை தடுக்க ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2.5 கிராம் தாமிர ஆக்ஸிகுளோரைடு அல்லது 5 மி.லி பேசில்லஸ் கலந்து மண் நனையும்படி தெளிக்க வேண்டும்.
அடிச்சாம்பல் நோய்:
1. இலையின் மேற்புறத்தில் வெள்ளை நிற சாம்பல் போன்ற வளர்ச்சி காணப்பட்டு இலைகள் முழுவதும் காய்ந்து விடும்.
2. நாற்று நட்ட 20 நாட்களில் 1 லிட்டர் தண்ணீரில் 2 கிராம் ; ரிடோமில் கலந்து 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிப்பதன் மூலம் இந்நோயினை கட்டுப்படுத்தலாம்.
ஊதா கொப்புள நோய்:
1. வட்ட வடிவ கருப்பு நிற அடர் வளையங்கள் வெல்வெட் போன்று இலையின் அடிப்புறத்தில் இருந்து மேல்புறம் நோக்கி உருவாக்கும். பின் இலைகள் மெதுவாக நுனியில் இருந்து கீழ்நோக்கி மடிய ஆரம்பிக்கும்
2. ஒரு கிலோ விதைக்கு 4கிராம் திரம் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
3. ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் மான்கோசெப் அல்லது ரிடோமில் 2 கிராம் கலந்து நட்ட 30 மற்றும் 45 ம் நாட்களில் தெளித்து இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.
திருகல் நோய்:
1. பாதிக்கப்பட்ட இலைத் தாள்கள் பழுப்பு நிறமாகி சுருண்டும், திருகியும் காணப்படும். நோய் தாக்கிய வெங்காய பயிரின் வளர்ச்சி குன்றி விடும். வெங்காயக் காய்களை நோய் தாக்குவதால் காய்கள் நீண்டும், சிறுத்தும் (கோழிக்கால் வெங்காயம்) காணப்படும்.
2. விதை வெங்காயத்தை நடுவதற்கு முன்னர் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மி.லி பேசில்லஸ் கலந்த திரவத்தில் அரை மணி நேரம் ஊற வைத்து நடுவதால் பயிர்களை நோய்த் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.
3. 5 மி.லி பேசில்லஸ் திரவத்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து வெங்காயப் பயிர் நட்ட 30 மற்றும் 45 நாட்களில் இருமுறை தெளிப்பதன் மூலம் இந்நோய்; பரவுவதை தடுக்கலாம்.
மேற்காணும் கட்டுப்பாட்டு முறைகளைத் தவிர பின்வரும் பொதுவான முறைகளை பயன்படுத்துவதன் மூலம் வெங்காய பயிரில் நோய் மற்றும் பூச்சித்தாக்குதல் ஏற்படுவதை குறைக்கலாம்.
1. பயிர் சுழற்சி முறையை பின்பற்றலாம்.
2. நோயற்ற வெங்காய விதைக்குமிழ்களை பயிரிடுவதற்கு தேர்ந்தெடுக்க வேண்டும்.
3. விதை வெங்காயத்தை நடுவதற்கு முன்னர் ஒரு லிட்டர் தண்ணீரில் 5 மி.லி பேசில்லஸ் கலந்த திரவத்தில் அரை மணி நேரம் ஊற வைத்து நடுவதால் பயிர்களை நோய்த் தாக்குதலிலிருந்து பாதுகாக்கலாம்.
4. வயலைச் சுத்தமாக வைத்தல், சீரான இடைவெளியில் வெங்காய விதைகளை நடவு செய்தல் அவசியம்.
மேற்காணும் வழிமுறைகளை பின்பற்றி சிறந்த முறையில் வெங்காய சாகுபடி செய்து விவசாயிகள் பயன்பெறுமாறு விருதுநகர், மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டி கேட்டுக்கொள்கிறார்.