வேலை வாங்கித் தருவதாக வாங்கிய 11 லட்சம் பணத்தை திருப்பி கேட்ட போது கொலை மிரட்டல் விட்ட முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் கைது!

சென்னை தலைமைச் செயலகத்தில் ஆதி திராவிட நலத்துறையில் ஏ.எஸ்.ஓ வாக பணிபுரிந்து வரும் ரவிமீது (அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளராக இருந்தவர் ) ராணிப்பேட்டையைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

ஹனிபா மற்றும் ஆக்டிங் ஓட்டுநர் விஜய் ஆகிய இருவர் மூலம் விஜயபாஸ்கர் உதவியாளராக ரவி இருந்த போது அறிமுகம் கிடைத்ததாகவும் அரசு வேலை வாங்கித் தர 11 லட்ச ரூபாய் செலவாகும் என ரவி கூறியதன் அடிப்படையில் பணத்தை கொடுத்ததாகவும், தனக்கு பல துறை அமைச்சர்கள் தெரியும் என்பதால் எந்த துறையிலும் வேலை வாங்கித் தருவதாக கூறி நம்ப வைத்ததாகவும் முத்துலட்சுமி தன் புகாரில் தெரிவித்து உள்ளார்.

அரசு வேலை வாங்கி தராமல் அலை கழித்ததாகவும், பணத்தை திருப்பித் தருமாறு ஹனிபா மற்றும் ரவிக்குமாரிடம் கேட்டபோது இருவரும் மிரட்டியதாகவும் அவர் புகாரில் கூறி உள்ளார். இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலை மோசடி தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரிடம் உதவியாளராக இருந்தவர் உள்பட 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ததால் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அலுவலகத்தில் பணி செய்யும் அலுவலர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.