அரசியல்

வசமாக சிக்கிக் கொண்ட எஸ்.பி.வேலுமணி!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நடக்கும் அரசியல் சமாச்சாரங்கள் அனைவரும் அறிந்ததே. ஸ்டாலினிடம் இருக்கும் முன்னாள் அமைச்சர்களின் ஊழல் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் எஸ்.பி.வேலுமணி. கடந்த சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வேலுமணியை வீழ்த்தி விட வேண்டும் என்று திமுக கடுமையாக முனைப்பு காட்டியது.

ஆனால், கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தார் எஸ்.பி.வேலுமணி. அத்துடன், கோவையில் மொத்தமுள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவும், ஒரு தொகுதியில் கூட்டணிக் கட்சியான பாஜகவும் வெற்றி பெற வேலுமணி முக்கிய பங்காற்றியுள்ளார். அதற்கு முக்கிய காரணம் தொகுதி முழுவதும் அவர் செய்த பணிகள். தொகுதி மட்டுமல்ல அமைச்சராக இருந்தபோது, அந்த செல்வாக்கை பயன்படுத்தி கோவை மாவட்டம் முழுவதுமே அவர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் என்று சிலாகிப்பார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அதேசமயம், கோவை முழுவதுமே சொந்த கட்சியை சேர்ந்தவர்களாக இருந்தாலும், தன்னை எதிர்த்து யாரும் ஸ்கோர் செய்து விடக் கூடாது என்பதிலும் அக்கறை காட்டி வருபவர் எஸ்.பி.வேலுமணி. அந்த வகையில், அவர் செய்த காரியம் பற்றி தற்போது கோவை முழுவதும் பேச்சாக இருக்கிறதாம்.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அமுல் கந்தசாமி, தான் வெற்றி பெற்றால் தனது தொகுதி மக்களுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய நவீன ஆம்புலன்ஸ் வாகனத்தை தனது சொந்த செலவில் வாங்கித்தருவதாக பிரசாரத்தின்போது தெரிவித்திருந்தார். அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்றதும் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை ஸ்பான்சர் உதவியுடன் வாங்கித் தந்துள்ளார் அமுல் கந்தசாமி. இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

இதையடுத்து, எஸ்.பி.வேலுமணியும் கோவை மக்களுக்காக ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கினார். 10 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியைத் தந்த மக்களுக்காக 2 இலவச ஆம்புலன்ஸ்கள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார். இந்த ஆம்புலன்ஸை பற்றிய பேசுத்தான் கோவையில் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. அவர் அளித்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ‘நல்லறம் அறக்கட்டளை’ என்று இருப்பதை பார்த்து இது அந்த ஆம்புலன்ஸ்ல என்று சந்தேகம் கிளப்பி வருகிறார்கள் தொகுதி வாசிகள்.

எஸ்.பி.வேலுமணியின் சகோதரர் நல்லறம் அறக்கட்டளை என்ற அமைப்பை நடத்தி வருகிறார். அதிமுக ஆட்சியில் இந்த அறக்கட்டளையின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது எஸ்.பி.வேலுமணி அர்பணித்துள்ள ஆம்புலன்ஸ் வாகனத்தில் நல்லறம் என்ற பெயர் இருப்பதுதான் தொகுதி மக்களின் சந்தேகம். அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை அப்படியே அவர் கொடுத்து விட்டாரா அல்லது விளம்பரத்துக்காக நல்லறம் அறக்கட்டளையின் பெயர் அதில் இருக்கிறதா அல்லது அவர்களது ஸ்பான்சர் உதவியுடன் ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கப்பட்டதா என்று பேசிக் கொள்கிறார்கள் கோவை வாசிகள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button