பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையை நாள் வாடகை விட்டு வசூல் செய்யும் பழனி நகராட்சி அதிகாரிகள்!? தாய்மார்கள் நலன் கருதி பாலூட்டும் அறையை மீட்டு எடுப்பாரா திண்டுக்கல் மாவட்டம் ஆட்சியர்!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று பழனி. அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்கும் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அதுமட்டுமின்றி பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.
குறிப்பாக பக்தர்கள் வசதிக்காக பழனியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் பழனி பேருந்து நிலையம் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக குழந்தைகளுடன் குடும்பத்துடன் வரும் பாலூட்டும் தாய்மார்கள் பேருந்து நிலையங்களில் காத்திருக்க வேண்டியுள்ளது. அவ்வாறு காத்திருக்கும் நேரங்களில் தாய்மார்கள் எவ்வித இடையூறுமின்றி குழந்தைகளுக்குப் பாலூட்டும் வகையில், அரசுப் பேருந்து முனையங்கள், நகராட்சி, நகரப் பேருந்து நிலையங்கள், பேருந்துப் பணிமனைகளுடன் உள்ள பேருந்து நிலையங்கள் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அந்த அறை செயல்படாமல் எப்போதுமே பூட்டி காட்சி பொருளாக மட்டுமே இருக்கிறது. அது மட்டுமில்லாமல் அந்த அறை முன்பு நடைபாதை கடை போட்டு ஆக்கிரமித்து வைத்துள்ளனர். இதனால் பேருந்து நிலையத்திற்கு வரும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பால் கொடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. பேருந்து நிலையத்தின் உள்ளே கட்டப்பட்டிருக்கும் கடைகளுக்கு முன்பாக 3 அடி வரை மட்டும் பொருட்களை வைத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது . அதுமட்டுமில்லாமல் மஞ்சள் கோடு போடப்பட்டது. அதைத் தாண்டி பொருட்கள் வைக்கக் கூடாது. கடைகளையும் நடத்தக் கூடாது என நகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நகராட்சி உத்தரவை மீறி சட்ட விரோதமாக நடை பாதைகளில் கடைகள் வைக்கப்பட்டுள்ளது . இதனால் நடந்து செல்வதற்கு பயணிகளுக்கு பெரிதும் இடையூறாக இருப்பதாகவும் பயணிகள் நடந்து செல்லும் பாதையில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் பொதுமக்கள், பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருவதாகவும் இது சம்பந்தமாக பலமுறை பழனி நகராட்சி அதிகாரிகளுக்கு சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்த பிறகு பழனி பேருந்து நிலையத்தின் உள்ளே நடைபாதையில் இருக்கும் கடைகளை அகற்றுவது போல் அகற்றி இன்று ஒரு நாள் மட்டும் கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு நிரந்தர தீர்வுக்காண எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பழனி நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் என்றும் அதற்கு காரணம் என்ன என்று கேட்டால் பேருந்து நிலையத்திற்குள் நடைபாதைகளில் கடைகளை வைத்திருப்பவர்களிடம் தினந்தோறும் நாள் வாடகை வசூல் செய்து கொள்ள தனி நபர்களிடம் வாய்மொழி ஒப்பந்தம் போட்டு வசூல் செய்து அதில் ஒரு குறிப்பிட்ட தொகையை மாநகராட்சி உயர் அதிகாரிகளுக்கு கொடுத்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. நடைபாதைகளில் கடைகளை வைக்கக் கூடாது என பழனி நகராட்சி உத்தரவை மீறி நடைபாதைகளில் கடை வைப்பதற்கு அனுமதி கொடுத்து அந்தக் கடைகளில் தினந்தோறும் வாடகை வசூல் செய்வதற்கு யார் அனுமதி அளித்தார்கள்! அப்படி வசூல் செய்யும் பணத்தை பழனி மாநகராட்சியில் உள்ள அதிகாரிகள் பங்கு போட்டு எடுத்துக் கொள்கிறார்களா!? இல்லை அரசியல்வாதிகள் வசூல் செய்கிறார்களா!? என சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்!
எது எப்படியோ பொதுமக்கள் நலன் கருதி பழனி பேருந்து நிலையத்தின் நடைபாதைகளில் வைத்திருக்கும் கடைகளை அகற்ற திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூகங்களின் கோரிக்கையாக உள்ளது.