பொதுமக்களின் குறைகளை நீதிமன்றம் மூலம் தீர்த்து வைக்கப்படும். கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட கோத்தகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி வனிதா!

76 வது குடியரசு தினமான, 26 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊட்டி,குன்னுார்,கோத்தகிரி, கூடலுார் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், 35 கிராம ஊராட்சிகள் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலுகா ஜக்கனாரை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கோத்தகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி மற்றும் கோத்தகிரி தாலுகா வட்டாட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் உள்பட பல்வேறு ஊராட்சி செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதுவரை இணைக்காத பொதுமக்கள் அனைவரும் வாக்காளர் உதவி மைய செயலி மூலம் இணைய வழியில் இணைத்துக் கொள்ளலாம். பெண் கல்விக்கு அனைவரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 18 வயது நிரம்பிய பிறகு திருமணம் செய்ய வேண்டும் என்று அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் மீது சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என தெரிவிக்கப்பட்டது. டெங்கு கொசு ஒழிப்பு, சுற்றுப்புற சுகாதாரத்தை தூய்மையாக வைத்து கொள்ளுதல் ஆகியன குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொழுநோய் விழிப்புணர்வு மற்றும் வாக்காளர் உறுதி மொழியை கோத்தகிரி வட்டாட்சியர் தலைமையில் அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனர்.
அதன் பின்பு கோத்தகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி வனிதா அவர்கள் பேசிய போது

கோத்தகிரி வட்ட சட்ட பணிகள் ஆணையக் குழு உள்ளது. இது என்னவென்றால் இலவச சட்ட உதவி மையம் ஆகும்.இந்த இலவச சட்ட உதவி மையத்தின் நோக்கம் என்னவென்றால் கிராமப் பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றால் பொறு வழக்கறிஞரை பார்த்து அவர்களிடம் உங்களது பிரச்சனைகளை கூறி நீதிமன்றத்தில் வழக்கு போட கூறினால் அதற்கான ஒரு தொகை வழக்கறிஞர்களுக்கு கொடுக்க வேண்டும். கிராமப்புறங்களில் இருக்கும் பொது மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு பெரும்பாலும் இல்லாததால் தமிழக முழுவதும் உள்ள மாவட்டம் மற்றும் தாலுகாக்களில் இலவச சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த இலவச சட்ட மையங்கள் நீதித்துறையுடன் இணைந்து செயல்படுகிறது. இந்த இலவச சட்ட மையத்தில் கிராம பொதுமக்கள் அவர்களது பிரச்சனைகளை கூறினால் உடனடியாக நீதிமன்றம் மூலம் தீர்த்து வைக்கப்படும். குறிப்பாக கிராமப்புறங்களில் இருப்பவர்கள் பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்து இருப்பார்கள் இறப்புச் சான்று பிறப்புச் சான்று வாரிசு சான்று போன்ற சான்றுகளை கேட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக அந்த சான்று கிடைக்காமல் இருக்கலாம் காலாவதி ஆன நிலையில் அதுபோன்ற சான்றிதழை நீதிமன்றம் மூலம் தான் பெற முடியும். அதேபோல் வயதானவர்கள் நீண்ட நாட்களாக முதியோர் பென்ஷன் கேட்டு விண்ணப்பித்து கிடைக்காதவர்கள் இலவச சட்ட உதவி மையத்தை அணுகலாம். அதேபோல் நீதிமன்றத்தில் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை இலவச சட்ட உதவி மையம் சார்பாக மனுக்கள் பெற்று சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்படும் என்றும் அதேபோல் வாரத்தில் ஒரு நாள் கிராமப் பகுதிகளில் இலவச சட்ட உதவி மையம் குழு வந்து உங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கோத்தகிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி வனிதா உறுதி கூறினார்.