மாற்றுத்திறனாளி ஆசிரியர் & மாணவர்களுக்கு அடிப்படை வசதி இல்லாத திருவண்ணாமலை செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!
மாற்றுத்திறனாளிகளின் கனவு நாயகனாக விளங்கும் தமிழக முதல்வர் ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பு மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக அதிகாரிகளை அழைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை விரைவாக முடித்து கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி பெண் பட்டதாரி ஆசிரியர் பணியாற்றி வருகிறார். அந்தப் பள்ளியில் 11ஆம் 12 ஆம் வகுப்புகளுக்கு தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஆனால் அந்தப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் படிக்கட்டு இல்லாததால் அவர் பள்ளி மேல் தளத்தில் உள்ள 11 ஆம் 12 ஆம் வகுப்பு வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் பள்ளியின் வரண்டாவில் மாணவர்களை அமர வைத்து தமிழ் பாடம் எடுத்து வருவதாக அதிர்ச்சி தகவல் வந்துள்ளது . அது மட்டும் இல்லாமல் மழைக்காலங்களில் பள்ளி வரண்டாவில் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதில் மிகவும் சிரமமாக இருப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பள்ளி கல்லூரிகள் அனைத்திலும் சாய் தல படிக்கட்டுகள் அமைக்க அரசு உத்தரவிட்டு உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செல்ல எந்தவித அடிப்படை வசதியும் இதுவரை செய்து தரவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதி செய்து தர தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையாகும்.