விவசாயம் சார்ந்த ஆடு மற்றும் மாடுகளுக்கு விவசாயிகளுக்கு கடன்!
09.08.2021
விருதுநகர் மாவட்டம்
சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஜெ.மேகநாதரெட்டி,இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், மல்லாங்கிணரில் உள்ள சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனத்தை மாவட்ட ஆட்சியர்.ஜெ.மேகநாதரெட்டி, அவர்கள் இன்று(09.08.2021) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவனமானது 2014 டிசம்பர் மாதம் 18ம் தேதி முதல் நபார்டு வங்கி நிதி உதவியுடன் மற்றும் வழிகாட்டுதலின்படி சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. மிகவும் பின்தங்கிய மாவட்டமான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி, அருப்புக்கோட்டை, விருதுநகர் வட்டராத்திலுள்ள 110 கிராமங்களில் 3715 விவசாய பங்குதாரர்களை கொண்டு 7ம் ஆண்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. 3715 பங்குதாரர்களில் 211 ஆண் பங்குதாரர்களையும் 3504 பெண் பங்குதாரர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது.
பிரதி வாரந்தோறும் வெள்ளிகிழமை காய்கறி சந்தை நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் இதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமப்புற விவசாயிகள் பயன் அடைகின்றனர். இதனால் 1000க்கும் மேற்பட்ட விவசாயிகள் குறைந்த செலவில் தரமான காய்கறிகள் வாங்கி செல்கின்றனர். பிரதி வாரந்தோறும் வெள்ளிக்கிழமை விவசாயிகள் எங்களுடைய மதிப்பு கூட்டுதல் இயந்திரத்தின் மூலம் அவர்களுடைய பயறு வகைகளை குறைந்த விலையில் மதிப்பு கூட்டுதல் செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பங்குதாரர்களுக்கு அவுட்லெட் மூலம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை அவர்களுடைய வீடுகளுக்கு நேரடியாக வழங்கி வருகின்றது.
இந்த நிறுவனத்தில் 20 பணியாளர்கள் மாதந்திர சம்பளத்தில் பணியாற்றி வருகின்றனர். 18 நபர்களுக்கு PF ESI போன்ற பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் மூலம் 22 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இ-சேவை மையம் மூலம் விவசாயிகளுக்கு தேவையான சேவை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. விவசாயக்கடன், விவசாயம் சார்ந்த ஆடு மற்றும் மாடு கடன் உள்ளிட்ட பங்குதாரர்களுக்கு தேவையான கடன் வசதி செய்து தரப்படுகிறது.
இந்த நிறுவனம், 3715 பங்குதாரர்களுக்கு விதை, உரம் ஆகியவற்றை சந்தை விலையை விட குறைந்த விலைக்கு வழங்கி, விவசாயிகள் அவர்களுடைய நிலத்தில் விதைக்கும் போதே, உள்ளுர் கொள்முதல் விலையை விட அதிக விலைக்கு வாங்கி கொள்வதாக ஒப்பந்தம் செய்து, விவசாயிகள் விளைவிக்கின்ற பொருட்களை கொள்முதல் செய்து கொள்கின்றன.
அதனடிப்படையில், இன்று சீட்ஸ் நிறுவனத்தினுடைய கொள்முதல் கிட்டங்கி, விவசாயிகளுடைய விளைபொருட்களை தரம் பிரித்தல், மதிப்பு கூட்டல், விற்பனை செய்தல் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஆய்வு மேற்கொண்டார்.
இவ்வாய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சங்கர்.எஸ்.நாராயணன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜசுரேஷ்வரன், சீட்ஸ் விவசாய உற்பத்தியாளர் நிறுவன பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.