297 கிலோ தங்கம் உட்பட 525 கோடி மோசடி! ஊழியர்களை அடியாட்களாக பயன்படுத்தி 800க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களை கொலை மிரட்டல் விடுத்த வின் டிவி நிறுவனர் தேவநாதன்
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக என்ற லெட்டர்பேடு கட்சியை நடத்தி வந்த வின் டிவி நிறுவனர் தேவநாதன் யாதவ் தன்னுடைய அலுவலகத்தில் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் இருக்கும் புகைப்படங்களை மாட்டி வைத்து மோசடியில் ஈடுபட்டு வந்த நிலையில் பொருளாதார பிரிவு காவல்துறையினர் கைது செய்து கிடக்குப்பிடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் ! மயிலாப்பூர் இந்து நிரந்தர வைப்பு நிதி லிமிடெட் நிறுவனத்தில் அதிக வட்டி தருவதாக கூறி, பல்வேறு நபர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்ததாக புகாரில் கடந்த ஆகஸ்ட் மாதம் தேவநாதன் யாதவ் மற்றும் அவரது தொழில் பினாமியான குணசீலன் மற்றும் தொலைக்காட்சி ஊழியர் மகிமைநாதன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்து குறிப்பிடத்தக்கது.
சென்னை மயிலாப்பூர் உள்ள நிதி நிறுவனத்திற்கு தேவநாதன் யாதவை நேரில் அழைத்து வந்து, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் தேவநாதனின் வலதுகரமாக இயங்கி வந்தவரும், பினாமியுமான சாலமன் மோகன்தாஸ் தலைமறைவாக இருந்து வருகிறார். இதற்கிடையே கடந்த 27ம் தேதி தேவநாதன் யாதவ், குணசீலன், மகிமைநாதன் ஆகியோரை போலீசார் 7 நாள் காவலில் எடுத்தனர். தொடர்ந்து 5 நாள் விசாரித்தனர். பிறகு, மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கு தேவநாதனை நேரில் அழைத்து வந்து லாக்கர்களை திறந்து சோதனை நடத்தி, ரகசிய லாக்கரில் இருந்து 3 கிலோ தங்கம், 33 கிலோ வெள்ளி, நிதி நிறுவனத்தின் அசையா சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த நிறுவனத்தின் ரகசிய அறையில் முதலீட்டாளர்களின் 300 கிலோ தங்கம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 3 கிலோ தங்கம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனால் மீதமுள்ள 297 கிலோ தங்கம் எங்கே போனது என்று போலீசார் தேவநாதனிடம் கிடுக்குப்பிடி கேள்விகளை கேட்டனர்.விசாரணை குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கூறுகையில், ‘150 ஆண்டுகள் பழமையான மயிலாப்பூர் நிதி நிறுவனத்தின் தங்க முதலீடுகளை தேவநாதன் சிறுக சிறுக எடுத்து தனது பெயரிலும், பினாமி பெயரிலும் பல்வேறு தொழில் முதலீடுகளை செய்துள்ளார். எழும்பூரில் இயங்கி வந்த தனது தொலைக்காட்சி நிறுவனத்தை நிதி நிறுவனத்தின் கட்டிடத்தின் பின்புற பகுதிக்கு இடம் மாற்றம் செய்துள்ளார். அதன்பிறகு நிதி நிறுவனத்தின் ரகசிய அறையில் இருந்த 300 கிலோ தங்க கட்டிகளை யாருக்கும் சந்தேகம் வராதபடி களவாடியதாக கூறப்படுகிறது. பிறகு அந்த தங்க கட்டிகளை பயன்படுத்தி, பினாமிகள் பெயரில் தமிழ்நாடு முழுவதும் பல நூறு ஏக்கர் நிலங்கள் வாங்கி குவித்துள்ளதாகவும், வெளிநாடுகளிலும், பங்கு சந்தைகளிலும் முதலீடு செய்து இருப்பதும் தெரியவந்தது. இந்நிலையில் முதலீடு செய்த பொதுமக்கள் தங்களது முதிர்வு பணம் மற்றும் முதலீட்டு பணத்தை கேட்க தொடங்கியதும், தனது பாதுகாப்புக்காக தேவநாதன் யாதவ், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக என்ற லெட்டர்பேடு கட்சியை தொடங்கி, யாரும் கூட்டணிக்கு அழைக்காத நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் வலிய சென்று கூட்டணியை ஏற்படுத்தி தன்னை யாரும் நெருங்காதபடி பார்த்துக் கொண்டார். அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தல் தொடக்கத்தில் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுடன் நெருக்கமாக இருப்பது போன்று பலவிதமான புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொண்டு, அந்தப் புகைப்படங்களை பெரிய அளவில் தனது அலுவலகத்தில் வைத்து அதன் மூலம் முதலீட்டாளர்களை மிரட்டி வந்ததும், ஊழியர்களை அடியாட்களாக பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்துள்ளது.மேலும் தான் போட்டியிட்ட சிவகங்கை தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி பல கோடி ரூபாய் பணத்தை தேர்தலுக்காக செலவு செய்தது போல் கணக்குக் காட்டியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் சிவகங்கை தொகுதியில் வேட்புமனு செய்யும்போது தனக்கு 300 கோடி ரூபாய் சொத்துகள் இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். அத்துடன், ‘வின் சோலார்’ என்ற பெயரில் எல்இடி விளக்குகளை மொத்தமாக விற்பனை செய்யும் நிறுவனத்தை தேவநாதன் நடத்தி வருகிறார். தனது மனைவி மீனாட்சி பெயரில், ‘எம்’ தமிழ் யூடியூப் சேனல் ஒன்றும் நடத்தி வந்துள்ளார். இதேபோல் தனது நெருங்கிய கூட்டாளியான குணசீலன் போன்ற பினாமிகள் பெயரிலும் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருவது விசாரணையில் தெரியந்துள்ளது. தேவநாதன் மீது நேரடியாக ரூ.24.50 கோடி மோசடி புகார்கள் வந்து இருந்தாலும், அவர் கைது செய்யப்பட்ட பிறகு 800க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். அனைத்து புகார்கள் மீதும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நிதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பதவியேற்ற 2017ம் ஆண்டுக்கு பிறகு தேவநாதன் வாங்கி குவித்துள்ள அசையா சொத்துக்கள், பினாமி சொத்துக்கள் அனைத்தும் நீதிமன்ற அனுமதியுடன் விரைவில் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளன