அதிமுக ஐடி விங் போலிக் கணக்கு… போட்டு உடைக்கும் பூங்குன்றன்!
அதிமுகவில் நடக்கும் கோஷ்டிச் சண்டையில் தகவல் தொழில் நுட்பப் பிரிவுக்குள் நடக்கும் போட்டி நாறடிக்கிறது. ஜெயலலிதாவின் முன்னாள் பிஏ பூங்குன்றனே அதிமுகத் தகவல் தொழில் நுட்பப் பிரிவுக்குள் நடக்கும் தில்லு முல்லுகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.
ஜெயலலிதா காலத்தில் தகவல் தொழில் நுட்பப் பிரிவுக்கு ஆஸ்பயர் சுவாமிநாதன் என்பவர் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அவர் பன்னீர்செல்வம் அணியிலிருந்தார். பிறகு அணிகள் இணைந்தபோது தகவல் தொழில் நுட்பப் பிரிவை நான்கு மண்டலங்களாகப் பிரித்துவிட்டார்கள்.
கட்சியின் நிர்வாகப் பணிக்காக மாவட்டங்களும் மண்டலங்களும் பிரிக்கப்படுவது வழக்கம். ஆனால், கட்சியின் பிற அணிகளையே மண்டலமாகப் பிரித்தது கிடையாது. தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்குப் பதவிகள் அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டைப் பழனிசாமி செய்தார்.
சென்னை மண்டலச் செயலாளராக இருந்த ஆஸ்பயர் சுவாமிநாதன் தேர்தலுக்குப் பிறகு ’கட்சியே வேண்டாம்’ எனச் சொல்லி விலகிவிட்டார். ‘’ஐடி பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. தேர்தலில் நாம் தோற்றுவிடும் நிலை உள்ளது எனக் கூறினேன். எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. அதிமுகவின் தற்போதைய தலைமைக்குத் தொலை நோக்குப்பார்வை இல்லை’’ என உறுமினார் ஆஸ்பயர் சுவாமிநாதன்.
இந்த நிலையில் ’கொடநாடு மர்மங்கள் தொடர்பாக வெளிச்சத்திற்கு வராத உண்மைகள் விரைவில்’ எனச் சொல்லி புயலைக் கிளப்பினார் ஆஸ்பயர் சுவாமிநாதன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் கொடநாடு எஸ்டேட்டில் பல மர்மமான மரணங்கள், கொள்ளைச் சம்பவங்கள், விபத்துகள் ஏற்பட்டன. ’’முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் கொடநாடு கொலை, கொள்ளையில் தொடர்பு இருக்கிறது’’ எனப் பத்திரிகையாளர்கள் முன்பு குற்றம்சாட்டப்பட்ட சயன், வாளையார் மனோஜ் ஆகியோர் சொன்னார்கள். இவையெல்லாம் பழனிசாமி ஆட்சியில் நடைபெற்றவை.
கொடநாடு மர்மம் ஓய்ந்திருந்த நிலையில்தான், ஆஸ்பயர் சுவாமிநாதன், கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை, விலகாத மர்மங்கள் வெளிச்சத்துக்கு வராத உண்மைகள்ஞ்விரைவில்’ என்று ஒரு ட்வீட்டும் அதன்பிறகு ‘கொடநாடு எஸ்டேட்டில் காவலர் கொலை செய்யப்பட்டுக் கொள்ளை முயற்சி, கார் டிரைவர் விபத்தில் மரணம் என அவிழ்க்கப்படாத முடிச்சுகள். ஆதாரங்களுடன் அனைத்துக்கும் அதிர வைக்கும் விடைகள் Game Over Bro’’ என்று அடுத்த ட்வீட்டும் போட்டு புயலைக் கிளப்பினார்.
கொடநாடு கொலை, கொள்ளையில் பழனிசாமி சிக்கப் போகிறார் என்பதுதான் ஆஸ்பயர் சுவாமிநாதன் தரும் சிக்னல். இந்தப் பின்னணியில்தான் பூங்குன்றன் போட்ட பதிவில் அதிமுக ஐடி விங்கிற்குள் நடக்கும் அக்கப்போர்களைப் பந்தி வைத்திருக்கிறார். ’ தகவல் தொழில் நுட்பப் பிரிவு சரியான பாதையில் செல்கின்றதா? இதைத் தலைமை கவனிக்கிறதா? ஒரே கட்சியிலிருந்துகொண்டு நிர்வாகிகளை வசைபாடுவது கண்டனத்திற்குரியது. எதிர்க்கட்சியை விமர்சனம் செய்வதைவிட்டுவிட்டு, தான் சார்ந்த கட்சியில் இருப்பவர்களை விமர்சனம் செய்வது உங்கள் தலையில் நீங்களே மண்ணை அள்ளி போட்டுக் கொள்கிறீர்கள். ஒருவரே, பல போலிக் கணக்குகளைத் துவங்கிப் பாராட்டுவதும், வசைபாடுவதும் வேதனைக்குரியது’ எனத் தெரிவித்திருக்கிறார்.
அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவில் ஆயிரக்கணக்கில் போலிக் கணக்குகள் இருப்பதாக ஏற்கெனவே புகார்கள் எழுந்த நிலையில் அந்த உண்மையை உடைத்திருக்கிறார் பூங்குன்றன். ’முகநூலில் சிலபேர் ஆபாசமாகத் திட்டித் தங்களை அறிவு நிறைந்தவர்களாகக் காட்டிக் கொள்கிறார்கள். போலிக் கணக்கை வைத்துக் கொண்டு கட்சியில் இருப்பவர்களையே தேவை என்றால் புகழ்வதும், தேவை இல்லையென்றால் வசைபாடுவதும் பாவக்கணக்கில் போய்ச் சேரும். கட்சிக்கு நல்லது செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை கெட்டது செய்யாது இருங்கள். இத்தெய்வங்களின் ஆன்மா உங்களை வாழ்த்தும்’ எனப் பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் எச்சரித்திருக்கிறார்.
அதிமுகவிலிருந்து முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் திமுகவில் இணைந்து வருவது தொடர்பாகவும் கருத்துச் சொல்லியிருக்கும் பூங்குன்றன், ‘உங்களுடன் இருக்கும்போது இந்திரனாகத் தெரிந்தவர் மாற்றுக்கட்சிக்குப் போகும்போது எப்படிக் குறைந்து போவார். இப்படி முட்டாள்தனமாகப் பேசுவதை நிறுத்திவிட்டு அவர் போனதற்கான காரணத்தை ஆராய்ந்து உங்களைத் திருத்திக்கொள்ள முயற்சிசெய்வது கட்சியைக் காப்பாற்றும் வழி. சுயநலம் உங்களை வளர்க்குமே தவிரக் கட்சியை ஒருபோதும் வளர்க்காது’’ எனக் கண்டித்திருக்கிறார்.