உச்ச நீதிமன்றம் நீட் தேர்வு விலக்கு வழக்கு குறித்த அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்திய முதல்வர்.
நீட் விலக்கை ஆளும் திமுக அரசு தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக கொண்டு வந்தது. அதன்படியே ஆட்சிக்கு வந்தது நீட் தேர்விற்கு எதிராக தமிழ்நாடு அரசு மசோதா கொண்டு வந்தது. இந்த மசோதா பல நாட்களாக ஆளுநர் ஆர். என் ரவியால் டெல்லிக்கு அனுப்பப்படாமல் முடங்கி கிடந்தது. அதன்பின் இந்த மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு மசோதாவில் மாற்றம் செய்து மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது.
ஆளுநர் ரவி மீண்டும் இதில் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வந்தார். இதையடுத்து ஆளுநருக்கு எதிராக திமுக தலைவர்கள், ஆளும் கூட்டணி தலைவர்கள் கடும் விமர்சனங்களை வைத்தனர். அதோடு ஆளுநர் ஆர். என் ரவி பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இந்த மோதலை தொடர்ந்து ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு நீட் விலக்கு மசோதாவை அனுப்பினார். நீட் நுழைவு தேர்விற்கு எதிராக தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு இன்னும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை. இந்த மசோதா இன்னும் டெல்லியில் நிலுவையில்தான் உள்ளது. இந்த நிலையில்தான் நீட் தேர்வை எதிர்த்து தொடரப்பட்ட தமிழ்நாடு அரசின் மனு மீது உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது.
கடந்த டிசம்வர் 3-ந்தேதி நடந்த விசாரணைக்கு பின் வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட உள்ளது. நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் பரிசீலனையில் உள்ளதால் கடந்த முறை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த முறை தமிழ்நாடு அரசு வாதத்தில், நீட் விலக்கு மசோதா குடியரசுத் தலைவர் பரிசீலனையில் உள்ளது. அதனால் இதை விசாரணை செய்ய கூடாது, என்று கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த வழக்கை நீண்ட காலம் தள்ளி வைக்க தயாராக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு வழக்கை 4 வாரங்களுக்கு மட்டும் ஒத்திவைத்து உள்ளது. இந்த நிலையில்தான் நீட் வழக்கில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.