கடன் வசூல் நெருக்கடி கொடுத்து வரும் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள்!தொடரும் தற்கொலைகள்!
நடவடிக்கை எடுக்காமல் கோமாவில் இருக்கும் சேலம் மாவட்டம் குற்றப்பிரிவு காவல்துறை!

தமிழ்நாட்டில் கடன் வசூல் முறையை நெறிப்படுத்த 2025 ஜூலை மாதம்
‘கடன் வழங்கும் நிறுவனங்கள் – நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (Tamil Nadu Money Lending Entities-Prevention of Coercive Actions Act, 2025) அமலுக்கு வந்துள்ளது.
கடன் வசூலிப்பதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில், “கடன் வழங்குவோர், அடகு கடைகள் ஆகியவை அதிக வட்டி பெறுவதை ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குவோர் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (NBFC), கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் தவிர அனைத்து பணம் வழங்கும் நிறுவனங்களுக்கும் புதிய சட்டம் பொருந்தும்.
கடன் பெற்ற நபரிடம் கட்டாய வசூல் செய்யும் நடவடிக்கையில் இறங்குதல். (வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கும் இவை பொருந்தும்)
கடன் வாங்கிய நபரின் பெற்றோர், கணவர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் நிறுவனமோ அதன் பிரதிநிதிகளோ கட்டாய வசூல் நடவடிக்கையில் ஈடுபடுதல்
கடன் வாங்கிய நபரின் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அவர்களை அவமதிப்பது, மிரட்டுவது, பின்தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபடுதல்
கடன் பெற்ற நபருக்கு சொந்தமான அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதைப் பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல்
கடன் பெற்ற நபரின் சொத்துகளை பறிமுதல் செய்தல், வீடு, வேலை பார்க்கும் இடங்களுக்கு அடியாட்களைப் பயன்படுத்துதல் மற்றும் சட்டவிரோதமான வழிமுறைகளை கையாண்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு சட்டமியற்றியுள்ளது.
ஆனால் இந்த சட்டத்தை எல்லாம் காற்றில் பறக்க விட்ட தனியார் பைனான்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து கடன் வாங்கிய நபர்கள் வீட்டிற்கு சென்று
முறையற்ற வசூல் நடவடிக்கைகள் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் தொடர் தற்கொலைகள் அரங்கேறி வருகிறது.

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகில் உள்ள கோபாலனூரை சேர்ந்த முருகேசன் மகன் சந்தோஷ் (24) இரண்டு சக்கர வண்டிக்கு திருச்செங்கோட்டில் உள்ள உஜீவன் என்ற தனியார் பைனான்சில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மாத தவனையில் கடன் வாங்கி இரண்டு சக்கர வண்டி வாங்கியுள்ளார்.
இந்த மாத லோனை கட்டவில்லை. வங்கியில் பணிபுரியும் (1) செளவுந்தரலிங்கம்(2) விக்னேஷ் (3) சரவணன் ஆகியோர் கடந்த 17ஆம் தேதி சந்தோஷ் வீட்டிற்கு சென்று லோனை கட்டுமாறு கேட்டும் தகாத கெட்ட வார்த்தைகளால் பேசி, கடும் நெருக்கடி கொடுத்து ஸ்கூட்டரை எடுத்துச் சென்றதால் அவர்கள்
முன்னிலையில்

வீட்டில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சந்தோஷின் தாயாா் லதா சங்ககிரி போலீஸில் செவ்வாய்க்கிழமை புகாா் செய்துள்ளாா். போலீஸாா் வழக்குப்பதிவு செய்து புதன்கிழமை உயிரிழந்த சந்தோஷின் சடலத்தை சங்ககிரி அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்து அவரது உடலை உறவினா்களிடம் போலீஸாா் ஒப்படைக்க அழைத்துள்ளனா்.
ஆனால், உடலை வாங்க மறுத்து தற்கொலைக்கு காரணமாக இருந்த தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தனியாா் நிதி நிறுவன ஊழியா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

உயிரிழந்த சந்தோஷின் உறவினா்கள்மற்றும் தமிழ்புலிகள் கட்சியின் நிா்வாகிகள் இளைஞரின் உயிரிழப்பிற்கு காரணமானவா்களை கைதுசெய்ய வலியுறுத்தி சங்ககிரி திருச்செங்கோடு- ஈரோடு பிரிவு சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த சங்ககிரி உள்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் தனசேகரன், சங்ககிரி காவல் ஆய்வாளா் ரமேஷ் ஆகியோா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் உயிரிழந்த சந்தோஷின் தாய் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்து நிதி நிறுவன ஊழியா்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து விரைவில் அவா்கள் கைது செய்யப்படுவா் என உறுதியளித்தனா்.
மேலும் சேலம் ஆதிதிராவிட நலத்துறையின் கீழ் அரசு சாா்பில் வழங்கப்படும் நிவாரணத்தொகை ரூ. 6 லட்சத்திற்கான காசோலை வழங்க மாவட்ட நிா்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.
உடனே மாவட்ட ஆட்சியர் அவர்கள் 6 லட்சம் ரூபாய் சோலையை வழங்கிய பின் உடலை பெற்றுக் கொண்டனர்.
எது எப்படியோ ஒருவர் தூண்டுதலின் பேரில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் தற்கொலைக்கு தூண்டிய நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம் என்ற சட்டம் இருந்தும் இதுவரை எந்த மாவட்டத்திலும் காவல்துறையினர் அந்த சட்டத்தை பயன்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இனிமேலாவது இது போன்ற உயிர்களை பறி கொடுக்காமல் சட்டவிரோதமாக செயல்படும் தனியார் கடன் வழங்கும் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




