கோடம்பாக்கம் டிரஸ்ட் புரத்தில் தூக்க மாத்திரைகள் கருவைக் கலைப்பதற்கான மாத்திரையையும் போதை மாத்திரை விற்பனை செய்த கும்பல் கூண்டோடு பிடிபட்டனர் .
போதை மருந்து விற்பனை செய்த மர்மகும்பல்.. மூளையாக செயல்பட்ட கல்லூரி மாணவி: ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலிஸ்! கல்லூரி மாணவர்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 6 பேரை போலிஸார் கைது செய்தனர்.
சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரம் விளையாட்டு மைதானம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை நடைபெறுவதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்படை அமைத்து போலிஸார் அப்பகுதியைச் சுற்றி தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அசோக் நகர் புதூரை சேர்ந்த கிஷோர் என்பவர் கையில் ஒரு பையுடன் நின்றுகொண்டிருந்தார். இவர் மீது சந்தேகம் அடைந்த போலிஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, போதை தரும் வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் அதிகமாக இருந்தன.
இதையடுத்து போலிஸார் கிஷோரையும் அவருடன் இருந்த மற்றொருவரையும் கைது செய்து விசாரணை நடத்தியபோது, அவர்கள் இதில் தொடர்புடையவர்களின் பெயர்களைக் கூறியுள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் போலிஸார் பூங்குன்றன், கோகுல், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜலட்சுமி , முத்துப்பாண்டி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இவர்களுடன் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த போதை மாத்திரை விற்பனை கும்பலுக்கு இளம் பெண் ராஜலட்சுமி என்பவர் தான் மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாகத் தெரியவந்தது. மேலும் அவர் கருவைக் கலைப்பதற்கான மாத்திரையையும் விற்பனை செய்து வந்துள்ளார்.
மேலும், போதை மாத்திரைகளை ஆந்திராவிலிருந்து கொரியர் மூலம் வரவழைத்து இணையத்தில் தங்களுக்கு என்று ஒரு குழுவை உருவாக்கி, அதில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்துள்ளனர். அதேபோல், போதை மாத்திரைகள், கருக்கலைப்பு மாத்திரைகள் தேவைப்பட்டால் எங்களை அணுகலாம் என வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் நெருக்கமான நண்பர்களுக்குத் தகவல் தெரியப்படுத்தியுள்ளனர்.
இதையடுத்து இந்த கும்பலுக்கு நிறைய ஆர்டர்கள் கிடைத்துள்ளன. சென்னை மாநகரை பொருத்தமட்டில் கூகுள் பே மூலம் பணத்தை வாங்கிக் கொண்டு, மாத்திரைகளை நேரடியாக விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இவர்களிடம் இருந்து 8 செல்போன்கள் ஐபேடு, 2 லேப்டாப்புகள், 3 இருசக்கர வாகனங்கள், 6,625 போதை 4 லட்சத்து 41 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றைப் போலிஸார் பறிமுதல் செய்தனர்.