தடை செய்யப்பட்ட கல் குவாரிக்கு அனுமதி வழங்க 25 லட்சம் ரூபாய் லஞ்சம் ! தேனி மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் மீது சாட்டையை சுழற்றுவார்களா லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!?
தேனி மாவட்டத்திற்கு உட்பட்ட மலைப் பகுதிகளில் அதிக அளவில் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போதைய கணக்கின் படி 53 குவாரியில் இயங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் ஜல்லி கற்கள், எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவை எடுக்கப்படுகின்றன. இவை தவிர தனி நபருக்கு சொந்தமான இடத்தில் கட்டுமானத்திற்காக 20க்கும் மேற்பட்ட மணல் குவாரிகள் தற்காலிக அனுமதியுடன் இயங்கி வருகின்றன. விதி எண் 44ன் படி தங்களுக்கு உரிய இடத்தில் இருந்து கட்டுமானத் தேவை, விவசாயப் பணிக்கு மட்டுமே மணல் மற்றும் கனிம வளங்கள் எடுக்க வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. நாளொன்றுக்கு 2,000 முதல் 6,000 லோடு மணல் ஆனது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவிற்கு சட்டவிரோதமாக கனிம வளம் கடத்தப்படுவதாக குற்றச்சாட்டு மட்டும் இல்லாமல் சட்ட விரோதமாக இயங்கும் குவாரிகளில் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் சரியாக கடைபிடிக்கப் படவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. விவசாய நிலங்களுக்கு அருகே குவாரிகள் செயல்பட அனுமதியில்லை. மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை வளங்கள் சட்டவிரோத கல் குவாரிகளால் பெரிதும் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. தேனி மாவட்டத்தில் சட்ட விரோத குவாரி நடத்துபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரிய வழக்கில் சட்டவிரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தங்களது பணியை இழக்க நேரிடும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தேனி மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் கனிமவளத்துறை காவல்துறை அந்த உத்தரவை எல்லாம் காற்றில் பறக்க விட்டு சட்ட விரோத கல்குவாரி உரிமையாளர்களுக்கு உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகளும் உள்ளது. அதேபோல் அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரி உரிமையாளர்களிடம் பல லட்சங்கள் பெற்றுக் கொண்டு கனிமவளத்துறை உதவி இயக்குனர் கண்டும் காணாமல் இருப்பதாக பல குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில் தேனி மாவட்டம் சீப்பாலக்கோட்டை கிராம நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதியில்
கூடலிங்கம் என்பவர் நடத்திய குவாரியில் முறைகேடு நடைபெறுவதை சுட்டிக்காட்டி
தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பாளையம் உதவி ஆட்சியர் 26/9/2024 அன்று குவாரிக்கு நேரில் சென்று ஆய்வு செய்து முறைகேட்டை கண்டுபிடித்து குவாரி இயங்குவதற்கு தடை விதித்து தற்போது அபதாரம் விதிப்பதற்கு மேல் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தேனி மாவட்ட கலெக்டர் உத்தரவை மீறி முறைகேடான கல் குவாரிக்கு அனுமதி வழங்க குவாரியின் உரிமையாளர் கூடலிங்கத்திடம் தேனி மாவட்ட கனிமவள துறை உதவி இயக்குனர் கிருஷ்ண மோகன் 25 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாகவும் இதே போல் பல கல் குவாரிகளுக்கு சட்ட விரோதமாக அனுமதி வழங்க பல கோடி ரூபாய் லஞ்சம் வாங்கிய பணத்தில் திருநெல்வேலி உள்ள சொந்த ஊரில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குறிப்பாக பல கோடி ரூபாய்க்கு ஆடம்பர சொகுசு பங்களா கட்டி உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் திருநெல்வேலியில் உள்ள தேனி கனிம வள உதவி இயக்குனர் மோகன் கிருஷ்ணகுமாரின் வீட்டில் சோதனை செய்தால் பல ஆதாரங்கள் கிடைக்கும் என்றும் ஆகவே தேனி மாவட்டத்தில் கனிமவளத் துறையில் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் கனிமவள உதவி ஆணையர் மோகன் கிருஷ்ணகுமார் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுத்து குவாரிகளில் தோண்டப்படும் பள்ளங்கள் முறையாக பாதுகாப்பாக மூடப்பட வேண்டும். அதுமட்டுமின்றி கல் குவாரி நடைபெறும் இடத்தை சுற்றி வேலி அமைத்தல், இயற்கை வளம் மாறாமல் இருக்க சுற்றிலும் மரங்களை நடுதல் போன்ற விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். ஆனால் இத்தகைய விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை என்று தெரிகிறது. இது அப்பகுதி மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமைந்துள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள இயற்கை வளங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் நடைபெறும் கல் குவாரிகளில் இருந்து அதிக அளவில் மணல் மற்றும் ஜல்லிக் கற்கள் கேரளாவிற்கு கொண்டு சொல்லப்படுகின்றன. இதனால் தேனி மாவட்டத்தில் விவசாயம் அழியும் நிலைக்கு தள்ளப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. உடனடியாக மாநில அரசு தலையிட்டு கல் குவாரிகளை கட்டுப்படுத்தி மேற்கு தொடர்ச்சி மலையின் இயற்கை வளத்தை காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் மத்தியில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.