திருப்பூரில் தினக்கூலி நபர்கள் பெயரில் GST நம்பர் வாங்கி 50 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு மோசடி !நடவடிக்கை எடுக்காத வணிக வரித்துறை கமிஷனர் மற்றும் அமலாக்க பிரிவு கமிஷனர்!?
திருப்பூர் திகில் !
போலி பில் டிரேடர்கள் பிடியில் வணிகவரித்துறை! கட்டப்பஞ்சாயத்து அலுவலகமாக திருப்பூர் வணிகவரித்துறை மாறிவருகிறதா!?
திருப்பூரில், அவிநாசி அருகே கைகாட்டிப்புதுாரில் உள்ள ஏ.இ.பி.சி., வளாகத்தில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் புதிய வணிக வரி கோட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
வணிக வரித்துறை இணை கமிஷனர் (பொறுப்பு) லட்சுமி பவ்யா தனிரு, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அமலாக்க பிரிவு இணை கமிஷனர் (பொறுப்பு) ரமாதேவி, வணிக வரித்துறை துணை கமிஷனர் முருககுமார், வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் உள்பட நிர்வாகிகள், ஆடிட்டர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
வணிக வரி மாவட்டம் 1ல், அனுப்பர்பாளையம், அவிநாசி, காந்திநகர், பொங்கலூர், திருப்பூர் வடக்கு – 1, திருப்பூர் வடக்கு – 2, திருப்பூர் ரூரல் – 1, திருப்பூர் ரூரல் 2 சரகங்கள் உள்ளன.
வணிக வரி மாவட்டம் 2 ல், திருப்பூர் தெற்கு, திருப்பூர் பஜார், திருப்பூர் சென்ட்ரல் – 1, சென்ட்ரல் 2, கொங்குநகர், லட்சுமி நகர்.வேறு மாவட்டத்திலிருந்த திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டு, புதிதாக திருப்பூர் வணிக வரி மாவட்டம் – 3 உருவாக்கப்பட்டுள்ளது. வணிக வரி மாவட்டம் 3 ல், தாராபுரம், காங்கயம், பல்லடம் – 1, பல்லடம் – 2, வெள்ளகோவில், உடுமலை வடக்கு, உடுமலை தெற்கு பகுதிகள் இடம் பெற்றுள்ளன.திருப்பூர் வணிக வரி கோட்டம் உதயமாகியுள்ளதால் திருப்பூர் மாவட்ட வர்த்தகர்கள், வரி பயிற்சியாளர், ஆடிட்டர்கள், ஈரோடு, கோவை என வெவ்வேறு மாவட்டங்களுக்கு செல்லவேண்டிய நிலை இனிமேல் கிடையாது.
அந்நியச் செலவாணியை அதிகப்படியாகப் பெற்றுத் தரக்கூடிய டாலர் சுற்றி என்று அழைக்கப்படும் ஊர் திருப்பூர். பனியன் தொழிலில் முதலிடமாக பல லட்சம் தொழிலாளர்களை வளர்த்து வருவது திருப்பூர் நகரமாகும். இந்த பனியன் நகரத்தில் வெளி மாநிலத்தை சார்ந்தவர்கள் நாளொன்றுக்கு பல நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பனியன்களை கொள்முதல் செய்வது அனுதினமும் உள்ள செயல்பாடு. இந்த நகரத்தில் பல வருடங்களாக இலை மறைவு, தலைமறைவாக இருந்த தொழில் போலி பில் டிரேடிங் தொழில். இது நாளடைவில் ஆல மர விழுது போல அசுர வேகத்தில் நடப்பில் வளர்ந்துள்ளது என்பதை விசாரிக்க களம் இறங்கினோம்.
திருப்பூர் பகுதியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.1000/- என தமிழக முதல்வர் வழங்கும் தொகையை பெறுவதற்காக திருப்பூர் சாயப்பட்டறை வீதி, பெத்தி செட்டிபுரம் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர படிப்பறிவு இல்லாத மக்களின் அறியாமையை பயன்படுத்தி தொடர்ந்து அதே பகுதியில் வசிக்கும் சிவக்குமார், சுந்தரபாண்டி, காளிதாஸ் மற்றும் இவருடன் சேர்ந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட நபர்களையும் சேர்ந்து மேற்படி அப்பாவி மக்களின் அறியாமையையும், குடும்ப சூழ்நிலையையும் பயன்படுத்தி விதவை உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை வாங்கியதாக நம்ப வைத்து மேற்படி பகுதியைச் சார்ந்த ஜோதிமணி, சீதா, லட்சுமி, பழனியம்மாள், செல்வி, சுந்தரி மற்றும் கணக்கம்பாளையம் திருக்குமரன் நகர் அப்பார்ட்மென்ட்டில் குடியிருக்கும் ராஜ், மாதேஸ், டி. பாண்டி போன்ற நபர்களிடம் ஆதார் கார்டு, பான்கார்டு, சாமார்ட் கார்டு, வங்கி பரிவர்த்தனை கணக்கு புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், மின் இணைப்பு ரசீது போன்ற ஆதாரங்களை வாங்கி திருப்பூர் நெசவாளர் காலனி, 25/26, எஸ்.வி.காலனி எக்ஸ்டென்சன், டவர் லைன் ரோடு,
திருப்பூர் என்ற முகவரியில் இயங்கி வரும் சக்சஸ் கம்ப்யூடெக் என்ற பெயரில்
நடத்தி வரும் ஆனந்த் என்பவர் மூலமாக மேற்படி நபர்களின் ஆதாரங்களைக்
கொடுத்து மேற்படி நபர்களுக்கு ஜி.எஸ்.டிஎண் எடுத்துள்ளார்கள்.
கலைஞர் மகளிர் உரிமை தொகை வாங்குவதற்காக வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி நபர்களின் ஆதாரங்களை வைத்து விண்ணப்பம் பதிவு செய்த போது முதலில் அவர்களின் செல் போன்களில் குறுஞ்செய்திகளாக தங்களது மனு ஏற்கப்பட்டது என வந்தது. இரண்டு நாட்கள் கழித்து மனு அளித்த நபர்கள் ஜி.எஸ்.டி எண் வைத்து தொழில் செய்து வருவதாகவும், அரசுக்கு வரி கட்டுவோர் பட்டியலில் உள்ளதால் தங்களது மனு நிராகரிக்கப்படுகிறது என குறுஞ்செய்தி வந்தது. அதிர்ச்சியடைந்த மேற்படி நபர்கள் அருகாமையில் உள்ள N.R.இப்ராஹிம் (சமூக ஆர்வலர்) அவரிடம் சொன்னதும், அவர் உடனடியாக செல்வி, ஜோதிமணி, சீதா, பழனியம்மாள், லட்சுமி, சுந்தரி போன்றவர்களை வட்டாட்சியர் அலுவலகம் அழைத்து வந்து வட்டாட்சியர் அவர்களிடம் மேற்படி சம்பவங்களை தெரிவித்த போது, அவர் இ-சேவை மையத்தை நாடும்படி சொன்னார். அங்கும் இதே பதிலாக வந்ததால் அருகிலுள்ள திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் க்ரைம் இன்ஸ்பெக்ட்டர் வசம் 30.09.2023 அன்று எழுத்துப்பூர்வமாக புகாராக கொடுத்துள்ளனர்
. அதற்கு பிறகு வணிகவரித்துறை அதிகாரிகளும் எதையும் கண்டு கொள்ளவில்லை. அதற்கடுத்து நாளிதழ்களில் செய்தியாக வந்தவுடன் வணிகவரித்துறை அதிகாரிகள் ஏதோ பெயரளவிற்கு வந்தார்கள், விசாரித்தார்கள், சென்றார்கள். நடவடிக்கை என்பது ஏதுமில்லை. இடமே இல்லாமல் தொழில் செய்யுமிடத்திற்கு சோதணையிடாமல், மனுவை பரிசீலிக்காமல், ஜி.எஸ்.டி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் மேற்படி நபர்கள் மீதுள்ள ஜி.எஸ்.டி.களை கேன்சல் செய்து வருகிறார்கள். ஒரு சில ஜி.எஸ்.டி.களை வணிகவரித்துறை அதிகாரிகள் கேன்சல் செய்துள்ளார்கள், மற்ற சிலவற்றை மேற்படி புகாரிலுள்ள சிவக்குமார், சுந்தரபாண்டி, காளிதாஸ் மூவரும் தானாகவே கேன்சல் செய்துவிட்டார்கள். தகவல் கொடுத்தவரிடம் மேற்படி சம்பவங்கள் குறித்து, வணிகவரித்துறை விசாரணை செய்து எழுதி வாங்குகிறதே தவிர, அடுத்தவர்களை ஏமாற்றி அவர்களின் அறியாமையை பயன்படுத்தி ஒரு மெகா ஏமாற்றுத் தொழில் செய்த சிவக்குமார், காளிதாஸ், சுந்தரபாண்டி போன்ற நபர்கள் மீது இது நாள் வரை எந்தவிதமான சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் மர்மம் என்ன
என்பது புரியாத புதிராக உள்ளது.
மேற்படி வணிகவரித்துறையின் செயல்பாடுகள்
அன்று முதல் இன்று வரை போலி பில் டிரேடர்களுக்கு சாதகமாக உள்ளதே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த தீர்வும் இல்லை. அந்தளவிற்கு குற்றவாளிகளை காப்பாற்றுவதற்கு மிகவும் தெளிவாக உள்ளது வணிகவரித்துறை. தாசில்தார் அலுவலகத்தைப் பொறுத்துவரை ரூ.1000/- கொடுத்தால் அவர்கள் பிரச்சனை தீர்ந்துவிடும். வணிகவரித்துறையை பொறுத்த வரை ஜி.எஸ்.டி களை கேன்சல் செய்துவிட்டால் அவர்கள் பிரச்சனை தீர்ந்து விடும். ஆனால் இந்த ஜி.எஸ்.டி-யை ஏமாற்றி எடுத்தவர்கள் யார்? இதற்குரிய ஆடிட்டர்கள் யார்? இதன் பின்னணியில் இருக்கும் பெரும்புள்ளிகள் யார்? என்பதைப் பற்றியோ, அரசுக்கு சேர வேண்டிய மேற்படி நபர்கள் உபயோகப்படுத்தியதும், கேன்சல் செய்யப்பட்டதுமான ஜி.எஸ்.டிகளின் நிலுவை வரித்தொகைகள், ஏமாற்றப்பட்ட வரித்தொகைகளை யாரிடம் பெறுவது? அதற்கு வணிகவரித்துறை ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? அல்லது கடந்த 2023 செப்டம்பர் மாதம் 5-ந் தேதி 45 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்து பட்ட பரிவர்த்தனமாக பத்திர தாளில் முறைகேடு செய்துள்ளோம் என மூன்று பில் டிரேடர்கள் சேர்ந்து ஒரு ஆடிட்டரின் துணையோடு எழுதி கொடுத்துள்ளார்கள். அதே போல் S.S.Fashion என்ற கம்பெனியின் பெயரில் கடந்த 20.11.2023 அன்று ரூபாய்.3.50 கோடிக்கு ஒரு ஆடிட்டர் மூலம் தொழில் செய்துவிட்டு, ஜி.எஸ்.டியையும் ஏமாற்றிவிட்டு எந்தவித கணக்கும் இல்லாமல் அரசுக்கு சேர வேண்டிய ஜி.எஸ்.டி தொகைகளை பட்ட பரிவர்த்தனமாக ஏமாற்றிவரும் நபர்களையும், போலி பில் டிரேடர்களையும், போலி பில் டிரேடர்களுக்கு துணை செல்லும் லாரி பார்சல் நிறுவனங்களையும் நன்றாக தெரிந்தும், திருப்பூர் வணிகவரித்துறை அதிகாரிகள் மேற்படி ஜி.எஸ்.டி. பில் விற்பனை செய்யும் நபர்களை ஜி எஸ் டி ஆவனகளை ரத்து செய்து காப்பாற்றுவதில் ஆர்வம் காட்டுகிறார்களே ஆளும் திமுக கட்சிக்கும் ஆட்சிக்கும் உள்ள நற்பெயரை கலங்கப் படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாகவும் தொடர்ந்து வணிகவரித்துறை அதிகாரிகள் இதே போன்ற செயல்களில் ஈடுபடுவார்களேயானால், ஆளும் அரசிற்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும். இவ்வளவு குற்றச்சாட்டு வந்த நிலையில் மோசடி செய்த நபர்களுக்கு உடந்தையாக இருந்த வணிகவரித்துறை அதிகாரிகள் மீது வணிக வரித்துறை கமிஷனர் மற்றும் அமலாக்க பிரிவு கமிஷனர் ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கு கேள்வி எழுந்துள்ளது.
வரக்கூடிய தேர்தல் காலகட்டத்தில் வாக்களித்தவர்களின் மன நிலை ஆளும் அரசிற்கு எதிராக அமையுமே தவிர எந்தவிதமான நற்பெயரும் கிடைக்காது, நன்மையும் கிடைக்காது என்கின்றனர் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள்.ஆகவே வணிகவரித்துறை அதிகாரிகள் மற்றும் அடிட்டர் மீது தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.