தேனி – போடி நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஓட்டுநரின் கவனக் குறைவால் இருசக்கர வாகனத்தில் மோதியதில் பெண் சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்த சோகம்!
தேனி மாவட்டம், தேனி – போடி நெடுஞ்சாலையில், வனகிரி பண்ணை அருகே, இருசக்கர வாகனத்தில் அரசு பேருந்து மோதியதில், ஒரு பெண் மற்றும் சிறுமி, உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்ததால் , அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம், வருசநாடு அருகே உள்ள முருக்கோடை பகுதியைச் சேர்ந்த வானதி க/பெ. ஜெயபிரகாஷ் மற்றும் ராணி க/பெ.அம்மாவாசை, அவரது மகன் உச்சிகேஸ்வரன், மகள் ருத்ராஸ்ரீ ஆகிய நான்கு பேர்களும் (ஸ்கூட்டியில்) இருவாகனத்தில் கேரளா மாநிலம் பூப்பாறையை நோக்கி சென்றுள்ளனர். மற்றொரு வாகனத்தில் ராணியின் கணவர் மற்றும் குடும்பத்தினர் சென்றுள்ளனர்.
தேனி – போடி நெடுஞ்சாலையில், தோப்புபட்டிக்கு கிழக்கே, வனகிரி பண்ணை அருகே, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி இருசக்கர வாகனத்தில் பயணித்த போது, வளைவை கடக்கும் பொழுது,பின்புறமாக கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி, தேனியில் இருந்து போடிநாயக்கனூருக்கு சென்ற அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதியதில், தூக்கி வீசப்பட்ட நான்கு பேர்களில் ராணி என்பவர், அரசுப்பேருந்தின் சக்கரத்தில் தலை சிக்கி சிதைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். வானதியின் நான்கு வயது மகள் ருத்ராஸ்ரீ என்பவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும் இருவாகனத்தில் பயணித்த வானதி மற்றும் ரூந்திக்கேஸ்வரன் ஆகியோர் பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது கோர விபத்தாக, தேனி-போடி நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்துக் குறித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேனி மாவட்டம் தேனி-போடி நெடுஞ்சாலையில், இரவு, பகல் இருபத்தினான்கு மணிநேரமும் காவல் துறையினரின் ரோந்துப்பணியினை துரிதப்படுத்திடவும், பொதுச் சாலையில், போதையில் தள்ளாடியும், அதிவேகமாகவும், கவனக் குறைவாகவும், சாலை விதிமுறைகளை முழுமையாகவும், முறையாகவும் பின்பற்றாமலும், இரண்டு, மூன்று, நான்கு சக்கர இலகு ரக, கனரக வாகனங்கள் இயக்கப்படுவதையும், அசுரவேகத்திலும், செல்போன்கள் பேசிக்கொண்டு, தனியார் மற்றும் அரசுப் பேருந்துக்கள் கவனக்குறைவாகவும், சாலை விபத்துக்களை ஏற்படுத்துவதையும், தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, விபத்தில்லா போக்குவரத்து என்ற நிலையினை ஏற்படுத்திடவும், விலைமதிப்பில்லா மனித உயிர்களின் இழப்புக்களைத் தவிர்த்திடவும், தமிழக அரசும், தேனி மாவட்ட ஆட்சித்துறை நிர்வாகமும், தேனி மாவட்ட காவல்துறை நிர்வாகமும் துரித நடவடிக்கை எடுத்திட முன்வர வேண்டும் என்பதே, அப்பகுதிவாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.