Uncategorizedஅரசியல்

நெருப்பு என்று தெரிந்தும் அன்னபூர்ணா உரிமையாளர் மீது கை வைத்த நிர்மலா சீதாராமன்! தேர்தல் அரசியலிலும் பின்னடைவு ஏற்படுத்தப் போகும் கொங்கு மண்டலம்!

கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த ஜிஎஸ்டி குறைதீர்க்கும் ஆலோசனைக் கூட்டத்தில்சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி அமர்ந்த பிறகு தொழில் மற்றும் வர்த்தக அமைப்பினருக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது.

அப்போது பேசிய கோவை அன்னபூர்னா ஓட்டல் உரிமையாளர் சீனிவாசன், உணவகங்களில் உணவுப்பொருட்கள், இனிப்பு மற்றும் காரம் ஆகியவற்றிற்கு வெவ்வேறு மாதிரியான ஜிஎஸ்டி வரி விதிப்பை சுட்டிக்காட்டும் விதத்தில் குடும்பமாக வந்து உணவு சாப்பிடுபவர்களுக்கு பில் அடிக்கும் போது கம்ப்யூட்டரே திணறுதுங்க மேடம், இனிப்புக்கு ஒரு ஜிஎஸ்டி, காரத்துக்கு ஒரு ஜிஎஸ்டி இருக்கு, சமாளிக்க முடியல என பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குனரான சீனிவாசன் நேரில் சந்தித்து பேசியதாகவும், அவர் மன்னிப்பு கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு தமிழகத்தில் இருந்தும் தேசிய அளவில் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்த வீடியோ நீக்கப்பட்டது.
இந்த நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனே தானாக முன்வந்து, பொது நிகழ்ச்சியில் அப்படி பேசி சங்கடத்தை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்டதாக வானதி சீனிவாசன் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் வருத்தம் தெரிவித்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். அதில் தமிழ்நாட்டின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கும் அன்னபூர்ணா சீனிவாசன் குறித்து தமிழக பாஜக செயல்பாட்டாளர்களின் செயல்களுக்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக அவர் கூறியிருந்தார்.

தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட பாஜக தங்களுக்கான வாக்கு வங்கியை மேம்படுத்த நுணுக்கமான அரசியலை கையில் எடுத்தார்கள். கொங்கு மண்டலத்தில் பிரதானமாக உள்ள அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த எல்.முருகன் மற்றும் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணாமலையை மாநிலத் தலைவர்களாக நியமித்தது.2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற 4 தொகுதிகளில், 2 (கோவை தெற்கு, மொடக்குறிச்சி) கொங்கு மண்டலத்துக்குட்பட்டது. கடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக கொங்கில் அதிக கவனம் செலுத்தியது. பிரதமர் நரேந்திர மோடி, அதிகமுறை விசிட் அடித்தது கொங்கு மண்டலத்துக்கு தான். “நாங்கள் கொங்கு பகுதிக்கு கூடுதல் கவனம் செலுத்துவோம்.” என்று மோடியே காரமடையில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஓப்பனாக பேசினார்.

கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட (அல்லது கேட்க வைக்கப்பட்ட) விவகாரம், அரசியல் பிரச்னையாக வெடிக்க தொடங்கியுள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் முதல் ராகுல் காந்தி வரை தமிழ்நாட்டில் பாஜக பாமக தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும்
நிர்மலா சீதாராமனின் நடவடிக்கைக்கு சரமாரியாக கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டலத்தின் மிக முக்கிய விஐபிகளில் ஒருவரும், தொழிலதிபருமான அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசனுக்கே இந்த நிலை என்றால் சாமானிய தொழில் செய்பவர்களுக்கு என்ற கேள்விகள் கொங்கு மண்டலத்தில் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.
தொழில் முனைவோரிடையே ஏற்ப்பட்டுள்ள இந்த அதிர்ச்சி கலந்த பீதி மனநிலை கொங்கு அரசியலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
கொங்கு மண்டலத்துக்கு தொழில்துறை தான் தூண். அதிலும் அன்னபூர்ணா ஹோட்டல் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது. கலந்தாலோசனை என சொல்லிவிட்டு, அதில் ஆலோசனை சொன்ன மூத்த தொழிலதிபருக்கே இந்த நிலையா என தொழில்துறையினர் கொந்தளிக்கின்றனர்.
கோவையில் கவுண்டர், நாயுடு ஆகிய இரண்டு சமுதாயம் தான் பவர் பாலிடிக்ஸ். கோவையின் பிஎஸ்ஜி, கேஜி, அன்னபூர்ணா, பிரிக்கால் உள்ளிட்ட பல பெரு நிறுவனங்களின் உரிமையாளர்கள் நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தான். அதில் ஒரு முக்கியமான தலைவருக்கு மரியாதை குறைவான விவகாரத்தை அவர்கள் லேசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றே தெரிகிறது.
கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட மாநிலத் தலைவர் அண்ணாமலை, கவுண்டர் மற்றும் நாயுடு சமுதாய வாக்குகளை கவர தீவிரமாக காய் நகர்த்தினார். தொழில் அதிபர்களுடன் ரகசிய சந்திப்புகளை நடத்தினார்.தொழில் அதிபர்களில் பலரும் பாஜகவுக்கு நிதி உதவி செய்து, அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் முடிவில் அண்ணாமலை சுமார் 4.5 லட்சம் வாக்குகளை பெற்றார். அதிலும் நாயுடு சமுதாயத்தினர் பெரும்பாலும் அண்ணாமலைக்கு தான் வாக்களித்ததாக பரவலாக பேசப்பட்டது.
வானதி சீனிவாசன் சொல்வதை போல, அன்னபூர்ணா சீனிவாசனே நேரடியாக வந்து மன்னிப்பு கேட்டிருக்கலாம். ஆனால், அதை பாஜக வீடியோவாக வெளியிட்டதை , அவர்களின் சொந்தக் கட்சியினரே பலரும் விரும்பவில்லை. இது தேர்தல் அரசியலிலும் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கொங்கு மண்டல வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Related Articles

Back to top button