மர்மமான முறையில் பழனி பேருந்து நிலையத்தில் ஐந்துபேர் பலி.. மூடி மறைக்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாக அதிகாரிகள்!திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை என்ன!?

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் இரண்டு நாட்களில் ஐந்துபேர் பலி.. பொறுப்பை தட்டிக்கழிக்கும் அறநிலையத்துறை, நகராட்சி, காவல்துறை. மனித உயிர்களை துச்சமாக மதிக்கும் அதிகாரிகளுக்கு TARATDAC கடும் கண்டனம்.


திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகனை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருகை தரும் பக்தர்களில் சிலர் தங்கள் இல்லங்களில் உள்ள மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களை பழனிக்கு கூட்டிவந்து தெருவில் அனாதையாக விட்டுவிட்டு சென்று விடுகின்றனர். இவ்வாறு அனாதைகளாக விடப்படும் இவர்கள் உணவிற்காக படும் துன்பம் சொல்லிமாளாது. இவர்களில் பெரும்பாலோனோர் பழனி பேருந்து நிலையத்தில் தங்கி யாசகம் வாங்கி பிழைப்பதும், பேருந்து நிலையத்திலேயே படுத்து உறங்குவதும் வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு படுத்து உறங்கியவர்களில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐந்துபேர் இறந்துள்ளார்கள். இவர்கள் இயற்கையாக மரணித்திருந்தாலும் இவர்களின் இறப்பிற்கு மூன்று துறைகள் கட்டாயம் பொறுப்பேற்க வேண்டும்.
முதலாவதாக, இறந்த ஐந்து பேரில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களும் இருந்திருக்ககூடும். அவ்வாறு மனநிலை பாதிக்கப்பட்டவர் இறக்காமல் பாதுகாக்க வசதியாக பழனியில் மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பகம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக TARATDAC சங்கத்தின் சார்பில் போராடியதன் பலனாக தற்போது காப்பகம் அமைக்கும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து திறப்பு விழாவிற்காக பல மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறது. காப்பகத்தை உரிய காலத்தில் திறந்திருந்தால் இறந்தவர்களுடைய உயிரை காப்பாற்றியிருக்கலாம். முறையான பராமரிப்பு செய்து அவர்களுக்கான வசதிகளை செய்து கொடுத்திருந்தால் இதுபோன்ற இறப்புகள் கட்டாயம் நிகழாமல் தடுத்திருக்க முடியும்.
இரண்டாவதாக, பழனியில் சில மாதங்களுக்கு முன்னதாக திறக்கப்பட்ட வீடற்றோர் இல்லத்தில் இறந்த நபர்களை சேர்த்திருந்தால் முறையான பராமரிப்பால் பாதுகாத்திருக்க முடியும். இடவசதி போதவில்லை என்றால் தேவஸ்தான நிர்வாகத்தின் சார்பில் கூடுதலாக வீடற்றோர் தங்குவதற்கான காப்பகத்தை புதிதாக ஏற்ப்படுத்தி தர வலியுறுத்தி இருக்க வேண்டும். எங்கெல்லாம் வீடற்றவர்கள் இருக்கிறார்களோ அவர்களை தேடிப்பிடித்து வீடற்றோர் இல்லத்தில் சேர்க்கும் தனது சமூக கடமையை பழனி நகராட்சி நிர்வாகம் சரிவர செய்திருந்தால் கண்டிப்பாக பறிபோன உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.
மூன்றாவதாக, இரவு பத்து மணிக்குமேல் தமிழகத்திலேயே பழனியில் மட்டும்தான் சமூக விரோதிகள், குடிகாரர்கள் படுத்துறங்கும் இடமாக பழனி பேருந்து நிலையம் திகழ்ந்து வருகிறது. காவல்துறை முறையான ரோந்துப்பணியில் ஈடுபட்டு இரவு பத்துமணிக்குமேல் பழனி பேருந்து நிலையத்தில் படுத்து உறங்கும் நபர்களை விரட்டி இருந்தால் மேற்கண்ட சம்பவம் நிகழாமல் தடுத்திருக்கலாம். 24 மணிநேரமும் குடிகாரர்கள் படுத்து உறங்குவதும், அங்கேயே மது சாப்பிடுவதும், வாந்தி எடுப்பதும் என எப்போது பார்த்தாலும் சமூக விரோதிகளின் கூடாரமாக பழனி பேருந்து நிலையம் மாற்றப்பட்டுவிட்டது. காவல்துறை விரட்டி இருந்தால் படுக்க இடமில்லாமல் பாதுகாப்பான இடமாகிய வீடற்றோர் இல்லத்தை நோக்கி சென்றிருப்பார்கள். இதன் மூலமாகவும் பறிபோன உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.
இப்படியாக மூன்று துறைகளும் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக தங்களது பொறுப்பை தட்டிக்கழித்த காரணத்தால் இரண்டே நாளில் ஐந்து உயிர்கள் பலியாக காரணமாக இருந்துள்ளார்கள் எனவே தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இதுபோன்ற உயிரிழப்பை தடுக்கின்ற வகையில் உடனடியாக பழனியில் மனநல காப்பகத்தை திறக்கவும், தெருவில் திரியும் அனைவரையும் வீடற்றோர் இல்லத்தில் சேர்ப்பதையும், அறநிலையத்துறை சார்பில் புதிதாக வீடற்றோர் இல்லம் கட்டவும், காவல்துறையின் ரோந்துப்பணியை தீவிரப்படுத்தி பழனி பேருந்து நிலையத்தை சமூக விரோதிகளின் பிடியிலிருந்து மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். ஜெயந்தி – மாவட்ட தலைவர்
S. பகத்சிங் – மாவட்ட செயலாளர்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், திண்டுக்கல் மாவட்டக்குழு

