அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீடு உட்பட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவு காவல் துறை அதிரடி சோதனை நடத்தியிருக்கிறது.
பழனிசாமி ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது துறையை கவனித்ததைவிட தனது தொழிலைத்தான் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பிரதானமாகக் கவனித்துக் கொண்டிருந்தார். விவசாயம், அட்டைப் பெட்டி தயாரிப்பு, சாயப்பட்டறை, டெக்ஸ்டைல்ஸ், கிரசர் என எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தொழில் பரந்து விரிந்திருந்திருந்தது. ரெயின்போ பேக்கேஜிங். ரெயின்போ டயர்ஸ், ரெயின்போ கலர்ஸ், ரெயின்போ ஹோம் பேப் பிரைவேட் லிமிடெட், ரெயின்போ புளுமெட்டல், விஸ்வா எக்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களை எம்.ஆர்.விஜயபாஸ்கர் நடத்தி வந்தார்.
இதுதவிர அவருடைய மனைவி விஜயலட்சுமி பாஸ்கர், அட்டைப் பெட்டி தயாரிப்பு, சாயப்பட்டறை, டிராஸ்போர்ட், காற்றாலை தொழில்களை விஜய் பேக்கர்ஸ், ரெயின்போ டயர்ஸ், ஆரியர் ஸ்ரீ செல்லாண்டியம்மன் டிரான்ஸ்போர்ட்ஸ், ரெயின்போ விண்டெக் பிரைவேட் லிமிடெட் பெயர்களில் நடத்தி வருகிறார்.
எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சரான பிறகுதான் இந்த நிறுவனங்கள் வளம் கொழித்தன. எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சர் ஆவதற்கு முன்பு 2015 – 2016-ல் வருமானவரித் துறைக்குக் காட்டிய அதிகாரப்பூர்வ கணக்குப்படி அவருடைய மொத்த வருவாய் 9,52,810 ரூபாய்தான். 2016-ல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சர் ஆகிறார். அதன்பின் 2016 – 2017-ம் ஆண்டில் அவருடைய வருவாய் 38,06,470 ரூபாயாக உயர்கிறது. அதன்பின் 2017 – 2018-ம் ஆண்டில் 52,63,740 ரூபாயாக அதிகரிக்கிறது. அதற்கு அடுத்த ஆண்டு 2018 – 2019-ம் ஆண்டில் வருமானம் 66,06,400 ஆக உயர்கிறது. இந்த காலகட்டம் அவர் மந்திரியாக இருந்த காலம். இதே போலத்தான் அவருடைய மனைவி விஜயலட்சுமி பாஸ்கரின் வருவாயும் அதிகரித்தது. கணவர் மந்திரி ஆவதற்கு முன்பு அதாவது 2015 – 2016-ல் அவருடைய வருவாய் 7,03,750 ரூபாய்தான். 2016 – 2017-ம் ஆண்டில் விஜயலட்சுமி பாஸ்கரின் வருவாய் 12,20,880 ஆக உயர்கிறது. அதற்கு அடுத்த ஆண்டு 2017 – 2018-ல் 23,40,290 ரூபாய். 2018 – 2019-ம் ஆண்டில் 28,80,680 ஆக உயர்ந்தது.
விஜயபாஸ்கரும் அவரது தம்பி சேகரும் கோடிக்கணக்கில் சொத்துக்களைக் குவித்திருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது. விஜயபாஸ்கரும் சேகரும் பங்குதாரர்களாகக் கொண்ட ரெயின்போ டையர்ஸ் மற்றும் ரெயின்போ புளு மெட்டல்ஸ் நிறுவனங்களின் பெயரில் கரூர் – கோவை ரோட்டில் எல்ஜிபி பெட்ரோல் பங்க் இடம் 30.8.2019 அன்று வாங்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் சதுர அடியில் அமைந்திருக்கும் அந்த பெட்ரோல் பங்க். புகழ்பெற்ற பஸ் கட்டமைப்பு நிறுவனமான எல்ஜிபி நிறுவனத்தின் பங்குதாரர் எல்.ஜி.பாலகிருஷ்ணனுக்கு சொந்தமானது. நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் அந்த பெட்ரோல் பங்கின் நிலம் பல கோடி ரூபாய் இருக்கும். அதில் ஒரு பகுதியைத்தான் விஜயபாஸ்கரும் சேகரும் வாங்கியிருக்கிறார்கள். இதன் மதிப்பு ரூ. 2.98 கோடி, இதே போல எந்தெந்த இடங்களில் எல்லாம் சொத்துகள் வாங்கிய விவரங்களை எல்லாம் தோண்டி துருவி எடுத்திருக்கிறது லஞ்ச ஒழிப்பு போலீஸ்.
நீண்டதூர அரசு குளிர்சாதன பேருந்துகளில் வைஃபை வசதி. நீண்ட தூர பஸ்களில் கழிப்பறை வசதி. இரவு நீண்ட தூரம் செல்லும் பஸ்களில் படுக்கை வசதி. போக்குவரத்து பணிமனைகளில் ஏடிஎம். அரசு பேருந்துகளில் சிசிடிவி பொருத்தப்படும். இப்படி 2017-ல் சட்டசபையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிவிப்புகள் பலவும் புஸ்வாணமாகிவிட்டது. காரணம் அவரின் நிர்வாகத் திறமையின்மை. தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சொந்த நிறுவனங்களை மட்டுமே அவர் அபிவிருத்தி செய்தார்.
‘’சென்னையில் எலக்ட்ரிக் பஸ்கள் விரைவில் கொண்டுவரப்படும்’’ பழனிசாமி ஆட்சியில் அறிவித்தார்கள். ஆனால், அதற்காக போக்குவரத்து துறை மற்றும் சி-40 என்ற இங்கிலாந்து முகமை இடையே பழனிசாமி ஆட்சியில் 2018ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆதாயம் எதுவும் கிடைக்காததால் அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.
தமிழக போக்குவரத்துத் துறை சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாய் நட்டத்தில் வைத்துவிட்டுப் போன எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது கம்பெனிகளை கோடிகளில் புழங்கும் அளவுக்கு லாபத்தில் இயக்கினார். இவரின் நிர்வாக சீர்கேட்டால் இன்றைக்குப் போக்குவரத்துத் துறைக்கு 33 ஆயிரம் கோடி ரூபாய்க் கடன் ஏற்பட்டிருக்கிறது.