லஞ்சம் வாங்கிய 13 லட்சம் பணத்தை காரின் டிக்கியில் பதுக்கி வைத்து உல்லாசமாக சுத்தி வந்த கோவை சிங்காநல்லூர் பெண் சார்பதிவாளர்! கையும் களவுமாக கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்!

கோவை சித்தாப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பத்திரப் பதிவுக்காக வெள்ளலூரில் அமைந்துள்ள சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார். அங்கு அவரிடம் ரூ.35,000 லஞ்சம் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகாரளித்துள்ளார்.

அதனடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கருப்பசாமியிடம், ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த பணத்துடன் அவர் சிங்காநல்லூர் பத்திரப்பதிவு அலுவலகம் சென்றுள்ளார். சார்பதிவாளர் அலுவலகத்திற்குள் இருந்த இளநிலை உதவியாளர் பூபதி ராஜா மற்றும் சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின் இருவரும் சேர்ந்து லஞ்சப் பணத்தை வாங்கியுள்ளனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின் மீது பல்வேறு புகார்கள் இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தியுள்ளனர். இரண்டு நாட்கள் தொடர் சோதனையில் ஈடுபட்டதில் சார்பதிவாளர் நான்சி நித்யா கரோலின் காரில் சோதனையிட்டபோது, அதில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் இருப்பது தெரியவந்தது. பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் மற்றும் பூபதி ராஜா மீது வழக்குப்பதிந்து கைது செய்துள்ளனர். நான்சி மீது பல்வேறு புகார் எழுந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் தப்பித்துவிட்டார். இந்தமுறை அவர் கையும் களவுமாக வசமாக சிக்கிவிட்டார்.
சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலின் போன்று, லஞ்ச ஊழல் புகாரில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் போலி ஆவணங்களை வைத்து நில மோசடி செய்து கொடுத்த சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரைவில் சோதனையிட வேண்டும் என தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சென்னிமலை பூப்பறிக்கும் மலை பாதுகாப்பு இயக்கம் சட்ட விரோத கல் குவாரி எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.