40 வருடமாக கழிவு நீரில் நடந்து நடந்து கால்கள் அழுகிய நிலையில் கண் கலங்கி நிற்கும் கிராம மக்கள்! நடவடிக்கை எடுப்பாரா தமிழக முதல்வர்!!

உசிலம்பட்டி அருகே 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கிராம மக்கள் !



சாலை வசதி இல்லாததால் சேற்றில் நடந்து நடந்து கால் அழுகிவிட்டதாக வேதனையுடன் சேற்றில் நெல் நடும் போராட்டம் நடத்தி அரசுக்கு கோரிக்கை விடுக்கும் கிராம மக்களின் அவலம்….
தமிழக முதல்வர் மு. க .ஸ்டாலின் அவர்கள் ஆகஸ்ட் 2 கிராம சபைக் கூட்டத்திற்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பா பப்படி கிராமத்துக்கு வருகை தந்து பொதுமக்களிடம் ஒரு நல்லாட்சியை ஏற்படுத்தும் வகையில் ஆச்சரியத்தை அளித்தார். பலரும் பாராட்டினார்கள்.ஆனால் முதல்வர் வந்த பாப்பாபட்டி கிராமத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டருக்கு அருகில் உள்ள கள்ளப்பட்டி கிராமம் 40 ஆண்டுகளாக எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் எந்த ஒரு வசதியும் இல்லாமல் எந்த ஒரு அரசு நலத் திட்டங்களும் செயல்படுத்தாமல் இருப்பதை மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் உள்ள திமுக கட்சி நிர்வாகிகள் தமிழக முதல்வரிடம் மற்றும் மாவட்ட ஆட்சியாளர்களிடமும் தெரிவிக்காதது தான் வேதனையாக உள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கள்ளபட்டி காலணி எனப்படும் முத்தையாபுரம் கிராமத்தில் சுமார் 300 மேற்பட்ட அதிகமான 90குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இரண்டு தெருக்களை மட்டுமே கொண்ட இக்குக்கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக கிராமம் உருவான நாள் முதல் இன்று வரை சாலை வசதி, சாக்கடை கழிவுநீர் வசதியின்றி தவித்து வருவதாக கூறுகின்றனர்.,
வீடுகளிலிருந்து வெளிவரும் சாக்கடை கழிவு நீர் தெருக்களில் எந்த நேரமும் சுகாதாரமற்ற முறையில் தேங்கியே கிடப்பதால் சிறுவர் முதல் பெரியவர் வரை கழிவுநீர் கலந்த சேற்றில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும்., இந்த கழிவு நீரில் தினசரி நடந்து நடந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் அதிகமாக உள்ளதால் தொற்றுநோய் ஏற்பட்டு டெங்கு போன்ற வைரஸ் தொற்று நோயால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் இந்த கழிவுநீர் சேற்றில் நடந்து செல்வதால் கால்களில் தொற்று நோய் உண்டாகி கால்கள் அழுகும் நிலை உருவாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
இப்படி கிராம மக்கள் கால்கள் அழுகி காணப்படும் சூழல் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.
ஆனால் ஏதோ தெரியவில்லை மாவட்ட நிர்வாகம் மட்டும் இந்த அவலநிலையை பார்த்துக்கொண்டு அமைதியாக கடந்து செல்கிறது என்றால் இதற்கு பின்னணி என்ன என்று தெரியவில்லை!
மேலும் சாக்கடை கழிவுநீர் தேங்கியுள்ள இடத்திலேயே குடிநீருக்கான ஆழ்துளை கிணறு உள்ளதால் அவ்வப்போது குடிநீரில் சாக்கடை நீரும் கலந்து வருவதாகவே கூறப்படுகிறது., அப்படி கழிவுநீர் குடிநீரில் கலப்பதால் குடிநீர் குடிக்கும் ஒரு சில பேருக்கு தொற்றுநோய் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வந்துள்ளது.
கிராமத்தின் அருகாமையிலேயே கிராமத்திற்கான மயாணம் உள்ளதால் அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகளின் போது உடல்களை எரியூட்டுவதை காணும் சிறுவர்கள் இரவில் பயந்துகொண்டு தூக்கத்தில் அலரும் சப்தத்துடன் ஒலி எழுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் கிராம மக்கள்.
மேலும் இந்த நிலை குறித்தும் சாலை, சாக்கடை கழிவுநீர் வடிகால் முறையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து கிராம மக்களை பாதுகாக்க கோரி கடந்த 40 ஆண்டுகளாக கிராம ஊராட்சி மன்ற தலைவர் முதல் மாவட்ட ஆட்சியர் வரை புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றே கூறப்படுகிறது., தேர்தல் நேரத்தில் வரும் அரசியல் தலைவர்களும் அவ்வப்போது செய்து தருவதாக கூறிவிட்டு இந்த கிராமத்தின் கோரிக்கைகளை கிடப்பில் போட்டுவிடுவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசு கிராம மக்கள் படும் துயரங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுத்து கிராம மக்களுக்கு அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.