அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சட்ட விரோதமாக அமோக விற்பனை ! கட்டவிழ்த்து விடப்பட்ட உடுமலைப்பேட்டைகுடிமங்கலம் காவல்துறை!நடவடிக்கை எடுப்பாரா திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் சட்டவிரோதமாக விற்பனை நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றது..

தற்போது உடுமலைப்பேட்டை காவல் உட்கோட்ட பகுதியில் உள்ள குடிமங்கலம், ஜல்லிபட்டி உட்பட பகுதிகளில், திருப்பூரை சேர்ந்த பல நிறுவனங்கள் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கி உள்ள நிலையில் தொழிற்சாலைகளுக்கு வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து பல ஆயிரம் கூலித் தொழிலாளிகள் குடும்பத்துடன் வேலை செய்து அப்பகுதியில் வசித்து வருகின்றனர். அப்படி வேலை செய்யும் பல கூலித்தொழிலாளிகள் கஞ்சா மது போன்ற பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கின்றனர்.

பல கூலித் தொழிலாளிகள் தங்கள் சம்பாதிக்கும் பணத்தை பெரும் பகுதியை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகளை வாங்கி வருவதுதான் நிதர்சனம். ஏனென்றால் இந்த லாட்டரி மூலம் பெரும் தொகை விழுந்தால் தாங்களும் வசதியாக வாழலாம் என்ற ஒரு அற்ப ஆசை மற்றும் அறியாமையில் தான் இதுபோன்ற லாட்டரிகளை வாங்கி வருகின்றனர். இந்த லாட்டரி போதையால் பல்லாயிரம் கூலித் தொழிலாளிகளன் குடும்பங்கள் வறுமையில் வாழ்வதாகவும் அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. பல கூலித் தொழிலாளர்கள் கடன் வாங்கி லாட்டரி சீட்டுகளை வாங்கி தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடந்து கொண்டிருப்பதை மறைக்க முடியாது.

ஆனால் உடுமலை காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட குடிமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி சீட்டுகள் சட்ட விரோதமாக அமோக விற்பனை செய்வதாகவும் குறிப்பாக பெதப்பம்பட்டி நாலு ரோடு பகுதியில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி விற்பனை நடப்பதாகவும் அப்படி சட்ட விரோதமாக விற்பனை செய்யும் நபர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் குடிமங்கலம் காவல்துறை எடுக்கவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது சம்பந்தமாக கள ஆய்வு மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யும் ஏஜெண்டுகள் மாதம் ஒரு பெரும் தொகையை குடிமங்கலம் காவல் நிலையம் மற்றும் உடுமலைப்பேட்டை துணை காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கும் கப்பம் கட்டி வருவதாகவும் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கண்டு கொள்ளாமல் இருந்து வருவதாகவும் அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றனர். அதைவிட அதிர்ச்சி தகவல் என்னவென்றால் குடிமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக இருக்கும் ராஜா சிவப்பிரகாசம் தான் நிழல் காவல் ஆய்வாளராக செயல்படுகிறார் என்றும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சட்டவிரோதமாக விற்பனை செய்யும் லாட்டரி ஏஜெண்டுகளிடம் மாதம் எவ்வளவு கப்பம் கட்ட வேண்டும் என்பதை நிர்ணயிப்பதும் இவர் தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அதுமட்டுமில்லாமல் குடிமங்கலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இது போன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு சமூக ஆர்வலர்கள் புகார் கொடுத்தால் அந்தப் புகாரின் மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் விசாரணை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக நேரடி காவலர்( SPCID)என்பவர்தான் விசாரணை செய்து அறிக்கை அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் வேலியே பயிரை மேய்வது போல் காவல் நிலையங்களை கண்காணிக்க வேண்டிய மாவட்ட கண்காணிப்பாளரின் நேரடி காவலர் சட்ட விரோதமாக செயல்படும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருந்தால் எப்படி குற்றங்களை தடுக்க முடியும் அது மட்டும் இல்லாமல் காவல் நிலையங்களில் நடக்கும் முறைகேடுகளை பற்றி நேர்மையான முறையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு எப்படி அறிக்கை அனுப்ப முடியும் என்ற குற்றச்சாட்டையும் சமூக ஆர்வலர்கள் வைத்துள்ளனர்.
கடந்த காலங்களில் உளுந்தூர்பேட்டை சந்தை பகுதியில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்ததன் காரணமாக காவல்துறையினர் வேறு வழியின்றி மாற்றி விற்பனை செய்த நபரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அனைத்து சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்