தமிழ்நாடு

கட்டுப்பாடு அறை வாயிலாக பெறப்படும் புகார்கள் தொய்வின்றி தீர்வு காணப்பட வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் 23.7.2021 அன்று தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை வரி வருவாய் இலக்கினை முழுவதும் எய்திட முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள GST வரி இழப்பீடு தொகையினை ஒன்றிய அரசிடமிருந்து விரைந்து பெற்றிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை குறித்த புகார்களை தெரிவிக்கும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை வாயிலாக பெறப்படும் வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் புகார்கள் எவ்வித தொய்வுமின்றி தீர்வு காணப்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.பொதுமக்களுக்கு நல்ல பல திட்டங்களை செயல்படுத்த வரி வருவாயானது அத்தியாவசியமனது என்பதால், வரி ஏய்ப்பு நடவடிக்கைகளை உடனுக்குடன் கண்காணித்து அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரியினை வசூலிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

வணிகர் நல வாரியம் சீரிய முறையில் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும்,  வணிகர் நல வாரியத்தில் வணிகர்கள் உறுப்பினராகி அதன் சேவைகளைப் பெறுவதற்கு துறை அலுவலர்கள் முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.பதிவுத்துறையில் ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் உள்ள ஆவண தொகுதிகளை கணினியில் பதிவு செய்தல் குறித்து முதலமைச்சர் அவர்கள் கேட்டறிந்தார்.  இதன்மூலம், இப்பணிகள் முடிவடைந்த பின்பு பொதுமக்கள் இணைய வழியாக ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை பெறுவதற்கு வழிவகை செய்யப்படுவதோடு, பட்டா மாறுதல் செய்யும் போது தொடர்புடைய ஆவணங்களை வருவாய் துறையினர் இணைய வழியாக பார்வையிடவும் இயலும்.

பத்திரப்பதிவு அலுவலகங்களின் சேவையானது மக்களுக்கு ஏற்றவகையில் எளிதானதாகவும், வெளிப்படைத்தன்மையுடனும்  அமைய வேண்டும் என முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும், நிதி ஒதுக்கீடு மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்  கூட்டத்தில்,  வணிகவரி மற்றும்  பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, இ.ஆ.ப., நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், இ.ஆ.ப., வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பா.ஜோதி நிர்மலாசாமி, இ.ஆ.ப., முதன்மைச் செயலாளர்/வணிகவரி ஆணையர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., பதிவுத் துறை தலைவர் ம.ப.சிவன் அருள், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button