பத்திரப்பதிவு முறைகேடு குறித்து விசாரிக்க பதிவுத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்… : உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

கொடைக்கானலைச் சேர்ந்த பக்ரிராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் எனக்குச் சொந்தமான எஸ்டேட், தீபா என்பவருக்குச் சொந்தமானது என கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் 2017-ல் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பதிவை ரத்து செய்யக் கோரி மாவட்டப் பதிவாளரிடமும், பின்னர் பதிவுத் துறை டிஐஜியிடமும் மனு அளித்தேன்.
பதிவுத் துறை டிஐஜி விசாரணை நடத்தி முறைகேடான பத்திரப்பதிவு நடந்திருப்பதாக அறிவித்தார். இருப்பினும் அப்பத்திரப் பதிவை ரத்துசெய்ய தனக்கு அதிகாரம் இல்லைஎன்றும், அதற்காக உரிமையியல் நீதிமன்றத்துக்குச் செல்ல உத்தரவிட்டார். அவரது உத்தரவை ரத்துசெய்வதோடு முறைகேடுப் பத்திரப்பதிவை ரத்து செய்யவும், வில்லங்கச் சான்றிதழில் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.ஆர்.கண்ணன் வாதிடுகையில், முறைகேடுப் பத்திரப்பதிவு நடந்திருப்பதாக டிஐஜி அறிவித்துள்ளார். அவரது உத்தரவே இறுதியானது. இதனால் தீபா பெயரில் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், முறைகேடுப் பத்திரப்பதிவுகளை ரத்து செய்ய பதிவுத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடையாது என உச்ச நீதிமன்றம் கூறிஉள்ளது. தீபா பெயரில் நடந்த பத்திரப் பதிவு முறைகேடானது என அறிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நிலத்தின் உரிமை மனுதாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு பிரச்சினை இல்லை என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: பதிவுத் துறைச் சட்டத்தில் பத்திரப் பதிவு முறைகேடு குறித்துவிசாரிக்க பதிவுத் துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பதிவுத் துறை அதிகாரி விசாரித்து பத்திரப்பதிவில் முறைகேடு நடந்துள்ளது என உத்தரவிட்டால், அந்த உத்தரவே இறுதியானது.
அந்த உத்தரவு பதிவுத்துறை ஆவணங்களிலும், வில்லங்கச் சான்றிதழிலும் பிரதிபலிக்க வேண்டும். பத்திரப்பதிவில் முறைகேடு நடந்திருப்பதாக உத்தரவிடும் அதிகாரி, அந்த முறைகேட்டின் பதிவுஆவணங்களை ரத்து செய்ய உரிமையியல் நீதிமன்றம் செல்லுமாறு உத்தரவிடுவதை ஏற்க முடியாது.
பதிவுத் துறை ஐஜி சுற்றறிக்கையில் முறைகேடு பத்திரப்பதிவு நடந்திருப்பது உறுதியானால், அதை ஆவணங்களில் குறிப்பிடவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையால் சொத்தின் உண்மையான உரிமையாளர் தேவையில்லாமல் உரிமையியல் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டாமல் இருக்கச் செய்ய முடியும். இந்த நடைமுறையை பதிவுத்துறை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும். பதிவுத்துறை ஐஜி, சுற்றறிக்கையை தவறாமல் பின்பற்ற வேண்டும் என அனைத்து சார் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.
இந்த வழக்கில் பதிவுத் துறை டிஐஜியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 2 வாரத்தில் முறைகேடு பத்திரப்பதிவு ஆவணங்களை ரத்துசெய்து, வில்லங்கச் சான்றிதழில் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.





Backbiome is an advanced daily wellness supplement formulated to help support spinal comfort, reduce feelings of built-up tension, and promote freer, smoother movement throughout backbiome everyday life.