50 லட்ச ரூபாய் கொடுக்காவிட்டால் பத்திரிகையில் வெளியிடுவோம் என்று மிரட்டியதாக முன்னணி வாரப் பத்திரிக்கை மீது ஜி ஸ்கொயர் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு!!
முதல்வரின் மருமகன் சபரீசன் நிறுவனம் என்பதால்
ஆட்சி அதிகார பலத்தை வைத்து பத்திரிகையாளர்கள் மீது வழக்குப் போட்டு மிரட்டி வருவதாக டிடிவி கண்டனம் தெரிவித்துள்ளார்!!
சவுக்கு சங்கர் மீது ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் சவுக்கு சங்கர் என் மீது திட்டமிட்டு பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர் என்றும் என்னை கைது சிறையில் அடைத்தால் சிறையிலிருந்து வெளியில் வந்தவுடன் கைது தொடர்புடையவர்களை யாரையும் விடமாட்டேன் என்று எச்சரித்துள்ளார்.
ஜி ஸ்கொயர் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது, அதில் கவின் என்பவர் தங்களது நிறுவனத்தின் இயக்குனர் ராம ஜெயம் என்கிற பாலாவை அலைபேசி வழியாக தொடர்பு கொண்டு 50 லட்சம் ரூபாய் பணம் கொடுக்கவில்லை என்றால் ஜூனியர் விகடன் மற்றும் யூடியுப் மீடியாக்களில் உங்கள் நிறுவனத்தின் மீது தவறான செய்திகளை வெளியிடச் செய்வேன் என்றும் மிரட்டியதாகவும், மேலும் அடையாளம் காட்டக்கூடிய ஒரு நபர் ஜி ஸ்கொயர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கடந்த 9ஆம் தேதி இதே தகவலை கூறி பணம் கேட்டு மிரட்டியதாகவும் அதில் தெரிவித்தது. இதே நேரத்தில் யூடியூப்பர் மாரிதாஸ் மற்றும் ஊடகவியலாளர், அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் ஆகியோர் ஜி ஸ்கொயர் என்கிற ரியல் எஸ்டேட் நிறுவனம் திமுகவின் மேலிடத்தில் தொடர்பு வைத்துக் கொண்டு மற்ற நிறுவனங்களை மிரட்டுகிறது. திமுக முக்கிய பிரமுகர்களின் பெயர்களை பயன்படுத்தி சிஎம்டிஏவில் கட்டிடம் கட்ட நிலங்களுக்கு அனுமதி பெறுகிறது என குற்றம் சாட்டி இருந்தனர்.
இதனடிப்படையில் சவுக்கு சங்கர் மற்றும் மாரிதாஸ் ஆகியோரின் பெயர்களும் அந்த புகாரில் சேர்க்கப்பட்டுள்ளது. ஜி ஸ்கொயர் நிறுவனம் பிரபல வார இதழான ஜூனியர் விகடன் மீதும் இதே புகாரை கூறியது. அதில் அந்நிறுவனத்தின் இயக்குனர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜூனியர் விகடன் பெயரைக்கூறி ஜி ஸ்கொயர் நிறுவனத்தை யாராவது மிரட்டியிருந்தால் விகடன் நிறுவனத்தை அணுகி தெளிவு பெற்றிருக்கலாம். உண்மை என்னவென்று விசாரித்து இருக்கலாம், ஆனால் காவல்துறையில் ஜி ஸ்கொயர் புகார் அளித்த இரவோடு இரவாக சென்னை மாநகர போலீஸ் பத்திரிக்கை நிறுவனத்தின் மீது வழக்கு பதிந்திருப்பது முறை அல்ல என கண்டித்துள்ளதுடன், இதில் உடனே முதல்வர் தலையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.