சேலம் அருகே தவறவிட்ட 4 லட்சம் ரூபாய் .அதிபுள்ள நகையை பெங்களூரில் மீட்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்த குமாரபாளையம் காவல்துறையினருக்கு குவியும் பாராட்டு!
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பெங்களூரில் தொழில் செய்து வருகிறார்
கோவையில் நடந்த உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெங்களூருக்கு மீண்டும் காரில் சென்றபோது சேலம் நெடுஞ்சாலையில் குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பச்சாம் பாளையம் என்ற இடத்தில் அமைந்துள்ள உணவகத்தில் காப்பி சாப்பிடுவதற்கு இறங்கி உள்ளனர்.
அப்போது ரமேஷ் மனைவி கையில் வைத்திருந்த 50 கிராம் நகை (செயின்) கீழே விழுந்ததை கவனிக்காமல் காரில் ஏறி சென்ற போது தங்க நகையை தவறவிட்டதை உணர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி உடனே குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். புகாரை பெற்றுக் கொண்ட குமாரபாளையம் காவல் ஆய்வாளர் உடனடியாக நகையை தவறவிட்ட இடத்தில் உள்ள கடையில் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவை ஆய்வு செய்த போது அதில் ஒருவர் கீழே குனிந்து எதையோ எடுத்துக்கொண்டு டஸ்டர் காரில் ஏரி புறப்பட்டு சென்றது பதிவாகி இருந்தது. ஆனால் அந்த காரின் பதிவு எண் சரியாக தெரியாததால் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடிகள் உள்ள கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது அந்த டஸ்டர் கார் கர்நாடக மாநிலம் பதிவு எண் இருந்தது. உடனே காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்தபோது காரின் உரிமையாளர் பெங்களூர் அத்திப்பள்ளி என்று தெரியவந்தது.உடனே அவரது தொலைபேசி எண்ணை கண்டுபிடித்து தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டு பேசிய போது அவர் நேரில் வராமல் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு தரவில்லை. ஆகையால் குமாரபாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் கர்நாடக மாநிலம் பெங்களூர் அத்திப்பள்ளி காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு அவர்கள் உதவியுடன் அந்த நபரை அத்திப்பள்ளி காவல் நிலையத்துக்கு வரவழைத்து அவரிடம் அந்த நகையை பெற்றுக்கொண்ட குமாரபாளையம் காவல்துறையினர் குமாரபாளையம் காவல் நிலையத்திற்கு வந்து நகையை தவறவிட்ட ரமேஷை நேரில் வரவழைத்து நகையை திருப்பி ஒப்படைத்தனர். நகையைப் பெற்றுக் கொண்ட ரமேஷ் குமாரபாளையம் காவல் ஆய்வாளருக்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார். நகையை பறி கொடுத்து இரண்டு நாட்களில் துரிதமாக செயல்பட்டு நகையை கண்டுபிடித்து ஒப்படைத்த துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தனிப்படை காவலர்களுக்கு பொதுமக்களிடம் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.